Published : 26 Sep 2017 08:59 AM
Last Updated : 26 Sep 2017 08:59 AM

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

கட்டிட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் மர்ம மரண வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அரசுக் கட்டிட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம்(58). இவர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சுப்ரமணியம் இருமுறை நேரில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் 3-வது முறை விசாரணைக்கு செல்ல வேண்டிய சூழலில், கடந்த மே மாதம் 8-ம் தேதி மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் சுப்ரமணியம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் பழனியப்பனை, நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இருமுறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் ஒரு முறை மட்டுமே அவர் நேரில் ஆஜரானார்.

இதனிடையே தினகரன் ஆதரவாளராக வலம் வரும் பழனிப்பனை, சுப்ரமணியம் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் காவல் துறையினர் கைது செய்யப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு பழனியப்பன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ஒப்பந்ததாரரான தென்னரசு ஆகியோர் தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

15 நாட்களுக்கு நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் மற்றொரு ஒப்பந்ததாரர் தென்னரசு ஆகிய இருவரும் ஆஜராகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x