Published : 06 Sep 2017 10:23 AM
Last Updated : 06 Sep 2017 10:23 AM

கருணாநிதி உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும்: முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யின் 75-வது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம், சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

இந்த நேரத்தில், கருணாநிதியுடனான பழைய நினைவுகள் என் கண்முன் நிற்கின்றன. நெருக்கடி காலத்தில் நான் சிறையில் இருந்தபோது முரசொலி 3 நாட்கள் தாமதமாகத்தான் எங்கள் கைகளில் கிடைக்கும். நான் உரத்தக்குரலில் முரசொலியை வாசிப்பேன். மற்ற தோழர்கள் சுற்றியிருந்து கேட்பார்கள். கடந்த 2004-ம் ஆண்டு பொடா வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது கருணாநிதி என்னை 2 முறை வந்து பார்த்தார். அப்போது முரசொலியில், என்னைப் பற்றியும் என் கொள்கை உறுதியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டதை மறக்கவே முடியாது. இப்போது பவளவிழா கொண்டாடும் முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கும். கருணாநிதி நலமுடன் வாழ வேண்டும். அவர் உரையாற்றுவதை தமிழ்ச் சமூகம் காண வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகத்தில் தற்போது மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. முதல்வர் கே.பழனிசாமி தனக்கு பெரும்பான்மை இருப்பதாக நினைத்தால், சட்டப்பேரவையைக் கூட்டி அதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: முரசொலி ஓர் ஏடு அல்ல. அது ஓர் இயக்கம், கருத்தியலை, அடிப்படையாகக் கொண்டது. முரசொலியைப் படித்தவர்கள் அதில் இருந்து விடுபட முடியாது. நானே அதற்கு ஒரு சாட்சி. நூலகங்களில் காத்துக்கிடந்து அந்த நாளிதழைப் படித்திருக்கிறேன். மாநில சுயாட்சியையும், மாநில உரிமைகளையும், மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் போன்றோரையும் முரசொலி மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நாட்டின் விடுதலைக்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியை குண்டுகளால் துளைத்த கூட்டம் இன்று மத்தியில் ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. இதை எதிர்த்துப் போராட வேண்டும். முரசொலி படிக்காதவர்கள் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: முரசொலியின் வரலாற்றை, கருணாநிதியின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. கருணாநிதியின் வரலாற்றை முரசொலியின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. சமூக நீதி, மாநில உரிமைகளை பாதுகாக்க கருணாநிதி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாரோ, அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க ஜனநாய சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பேராயர் எஸ்றா சற்குணம், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.என்.அம்மாசி, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் என்.சேதுராமன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

திமுக செயல் தலைவரும் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார். முன்னதாக, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்று நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். விழாவில் கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x