

12 மணி நேர வேலை மசோதா - எதிர்ப்பை மீறி நிறைவேற்றம்: தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான ‘தொழிலாளர்கள் வேலைநேர மசோதா’ தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், “மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, மென்பொருள் துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு 12 மணி நேர வேலை மசோதா பொருந்தும் வாய்ப்புள்ளது. வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
“பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியே...”: "12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழில்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கம் தொழிலாளர்களை குழப்பும் நோக்கம் கொண்டதாகும். பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சங்கங்கள் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக ஒன்றிய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே தமிழ்நாடு திருத்தச் சட்டம் அமைந்துள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, "தொழிலாளர்களுக்கு எதிராக 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது நியாயமற்றது. இது தொழிலாளர் விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அதேபோல் “தமிழக அரசு கொண்டுவந்துள்ள வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது. இம்மசோதா மீது தத்தமது எதிர்ப்புகளை பதிவு செய்த தமிழக கட்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். மசோதா குறித்து “ஆலை முதலாளிகளுக்கான சட்டமாக இது உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். யார் மீதும் திணிக்கப்படாது என்கிறார்கள். ஆனால் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்.” என்று விசிக உறுப்பினர் சிந்தனைசெல்வன் தெரிவித்துள்ளார்.
“கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது. தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதல்வரை சந்தித்து பேசினோம். முதல்வர் உறுதியளித்த பின்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்று சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்துள்ளார்.
சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் கூறுகையில், “நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற சம்பள உயர்வு, நிரந்தர வேலை எல்லாவற்றையும் நீர்த்துப் போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.” என்றார்.
இதனிடையே, "சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்: சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசுகையில்,"தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிச் சூடு இல்லை, இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன” என்றார்.
இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்; சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்; குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் 25 வாங்கப்படும்; க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் கருவி வாங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் உரை நேரலை இல்லை: அதிமுக வெளிநடப்பு: எதிர்க்கட்சி தலைவர் உரையை நேரலை செய்யாத காரணத்தால், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையின் போது அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
“தியாகராஜன் ஆடியோவுக்கு முதல்வர் மவுனம் காப்பது அநீதி”: "உதயநிதி ஸ்டாலின், சபரீசன் முறைகேடாக 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து இப்போது வரை திமுக அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருப்பது, அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏ தீவிர சோதனை: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியான பிம்பர் காலி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா: பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்துள்ளார். நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களிலும் தலையிட்டதாக துணைப் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டோலி, பிரதமரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ராப் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
ட்விட்டர் ‘ப்ளூ டிக்' அங்கீகாரத்தை இழந்த பிரபலங்கள்: ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, நயன்தாரா உட்பட இந்திய திரை பிரபலங்கள். ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய விளையாட்டு பிரபலங்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தமிழக அரசுப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை’: 2016 - 2021 வரை தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடு குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14.76 சதவீதம் குறைந்துள்ளது; மாநில அளவில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது; ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது முதலான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.