தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள், துப்பாக்கிச் சூடு இல்லை: காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள், துப்பாக்கிச்சூடு இல்லை என்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதல்வர் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நேற்றுமுதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர்சிங் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.21) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,"ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடி இருந்த நிலையிலும், பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். 1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளதால் இனி தமிழகத்தில் திமுகதான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்.

மக்களுக்கு நேரடியாக, தினமும் பலன் தரும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை. தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது. மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம்.

தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிச் சூடு இல்லை, இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன." இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in