Last Updated : 20 Apr, 2023 06:25 AM

 

Published : 20 Apr 2023 06:25 AM
Last Updated : 20 Apr 2023 06:25 AM

மக்களவைத் தேர்தலுக்காக 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் - திமுகவில் ‘மைக்ரோ லெவல்’ செயல்திட்டம்

திருச்சி: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு மைக்ரோ லெவல் செயல் திட்டங்கள் திமுகவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் காலம்வரை காத்திருக்காமல் பூத் கமிட்டி நியமனம், புதிய உறுப்பினர் சேர்க்கை, சமூக வலைதளப் பிரச்சாரம் என பல்வேறு வகையான 'மைக்ரோ லெவல்' சிறப்புத் திட்டங்களுடன் திமுகவினர் தற்போதே தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே... இதில் முக்கியமாக கருதப்படும் பூத் கமிட்டி குறித்து திமுக நிர்வாகிகள் கூறியது: ஒவ்வொரு தேர்தலிலும் பூத் கமிட்டியில் குளறுபடி நிகழ்ந்தால், தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்படும். இதைத் தவிர்க்க இம்முறை பூத் கமிட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில், தலா 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் பூத் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

அதிலும், ஒரு குடும்பத்தில் ஒருவரை மட்டுமே உறுப்பினராக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வாக்குச்சாவடியில் 1,500 வாக்குகள் இருந்தால், அங்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதில் இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணியிலிருந்து தலா ஒருவர் இடம்பெறுவர். 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணி இன்றுடன் (ஏப்.20) நிறைவு பெறுகிறது. இப்பட்டியலை இன்று இரவுக்குள் தலைமையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக கணக்கெடுப்பு: பூத் கமிட்டியில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 வாக்காளர்களையும் தனித்தனியாகச் சந்தித்து பேச வேண்டும். அவர்களில் திமுகவினர், மாற்றுக் கட்சியினர், நடுநிலையாளர்களை எத்தனை பேர் என பட்டியலிட்டு, தலைமைக்கு அளிக்க வேண்டும். அவர்களிடம் அரசின் சாதனைகளை விளக்குவதுடன், நலத்திட்டங்களை பெற உதவ வேண்டும்.

அவர்களின் வீட்டில் நடைபெறும் சுப, துக்க நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட பகுதிகளின் கட்சி நிர்வாகிகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, மாற்றுக் கட்சியினர் மற்றும் நடுநிலையாளர்களின் ஆதரவைப் பெற அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் அழைத்துச் சென்று, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதுதவிர தங்களது பகுதிகளிலுள்ள பொதுப் பிரச்சினைகளை அரசு மற்றும் உள்ளாட்சி பிரதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். புதிய வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க முயற்சிக்க வேண்டும்.

தற்போது தொடங்கியுள்ள பூத் கமிட்டியினரின் பணி, தேர்தல் நாளன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 பேரும் வாக்குப் பதிவு செய்வதை உறுதி செய்யும்வரை முழுவீச்சில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அணுகுமுறை தேர்தல் வெற்றிக்கு மிகவும் உதவும் என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x