Published : 19 Apr 2023 05:26 AM
Last Updated : 19 Apr 2023 05:26 AM

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் வெளிநடப்பு - பழனிசாமி விளக்கம்

சென்னை: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு, புறக்கணிப்பு செய்கிறோம் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், ‘‘தமிழகத்தில் ஒற்றை கையெழுத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலமாகஇன்றைக்கு அரசு பள்ளிகளில் படித்த 465 மாணவ, மாணவிகளை மருத்துவக் கல்லூரியிலும், 119 மாணவ, மாணவிகளை பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி’’ என்றுகூறி விவாதத்தை தொடங்கி வைத் தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: உறுப்பினர் விஜயபாஸ்கர் எதைச் சொன்னாலும், அதற்கு பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். ஆனால், கடந்த 10 நாட்களாக அமைச்சர்களின் பதில் உரையைக் கேட்பதற்கு அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருப்பதில்லை. அதனால், உறுப்பினர் விஜயபாஸ்கர் சொல்லும்போதே பதில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தான் வெளிநடப்பு செய்கிறோம். புறக்கணிக்கிறோம். அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி கலந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாகப் பேசுவது தவறானது.

அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்பு செய்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் பேசுவதை ஒளிபரப்பு செய்வதில்லை. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் கேட்கும் கேள்வி என்னவென்று மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால், நீங்கள் பதில் சொல்வது மட்டும்தான் நேரலையில் வருகிறது. ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு தருவதைப் போல், எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பு தரவேண்டும். எதிர்க்கட்சி பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

பேரவைத் தலைவர் அப்பாவு: எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து இதே கேள்வியை கேட்டுள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை பதில் சொல்லியிருக்கிறேன்.

நேரமில்லா நேரத்தில் யார் பேசப் போகிறார்? என்ன பேசப் போகிறார்? என்பது யாருக்கும் தெரியாது. அதனால், அதனை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. நேரமில்லா நேரத்தில் இதைத்தான் பேசப்போகிறோம் என்று அனைத்துக் கட்சிதலைவர்களும் சேர்ந்து முடிவெடுத்தால் மட்டுமே, அதனை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். இதில் எந்த தவறான நோக்கமும் இல்லை.

பழனிசாமி: மானியக் கோரிக்கையில் பேசுவதைக் கூட ஏன் ஒளிபரப்பு செய்வதில்லை. அமைச்சர் பேசுவது வெளியே வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது வெளியே வருவதில்லை.

பேரவைத் தலைவர்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எப்படி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லையோ, அதேபோல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை.

பழனிசாமி: பிரதான எதிர்கட்சித் தலைவர் மானிய கோரிக்கையில் பேசுவதையாவது ஒளிபரப்பு செய்யலாம்.

பேரவைத் தலைவர்: அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசி முடிவு எடுப்போம். நிச்சயம் முடிவு எடுக்கப்படும்.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: முன்னால் பின்னால் பேசுவது ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், இடையே எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது ஒளிபரப்பாவதில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

பேரவைத் தலைவர்: எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் அந்த வாய்ப்பைக் கொடுக்க முடியாது. முன்வரிசையில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் பேசுவார்கள். எனவே எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்வோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x