Published : 18 Sep 2017 11:38 AM
Last Updated : 18 Sep 2017 11:38 AM

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. முக்கியமாக அதிமுகவில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அதிமுக அணி இரண்டாகி பின்னர் மூன்றாகி அதன் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததன் பின்னர் அதிமுக அணி , தினகரன் அணி என செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் அணியினர் 19 பேர் மனு கொடுத்த நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 19 பேரும் விளக்கம் அளிக்க வராத நிலையில் திடீரென இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பில் இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல் காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள். இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள்:

1.தங்க தமிழ்செல்வன்,2.ஆர்முருகன், 3.மாரியப்பன் கென்னடி, 4.கதிர்காமு, 5.ஜெயந்தி பத்மநாபன், 6.பழனியப்பன், 7.செந்தில் பாலாஜி, 8.வெற்றிவேல், 9.எஸ்.முத்தையா, 10.என்.ஜி.பார்த்திபன், 11.கோதண்டபாணி, 12.பாலசுப்ரமணி, 13.ஏழுமலை, 14.ரங்கசாமி, 15.தங்கதுரை, 16.எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணி, 17.ஆர்.சுந்தர்ராஜ், 18.கே.உமா மகேஷ்வரி ஆகியோர் ஆவர்.

முன்னதாக, ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணியுடன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்தனர்.

இதனால் சட்ட சிக்கல் ஏற்பட்டது. பெரும்பான்மை இழந்த ஆளுங்கட்சியை பெரும்பான்மை நிரூபிக்க அழைக்க வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் கோரிக்கை வைத்தன. மறுபுறம் 19 ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கொறடா ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸுக்கு பதிலளிக்க 15 நாள் அவகாசம் கேட்டு சட்டப்பேரவை தலைவர் மறுத்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன் திடீரென ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்தார்.

இந்நிலையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பினர் மனு அளித்தனர். மனு விசாரணைக்கு வந்த போது சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை தொடரும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென இன்று 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x