Last Updated : 16 Apr, 2023 04:49 PM

 

Published : 16 Apr 2023 04:49 PM
Last Updated : 16 Apr 2023 04:49 PM

கிருஷ்ணகிரி | பறை இசை கலைஞர்களுக்காக அமைக்கப்பட்ட 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

வேப்பனப்பள்ளி அருகே கங்கமடுகு கிராமத்தில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த பறை இசைக்கலைஞர்களின் நடுக்கல்லை,அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதுகலை பட்ட மாணவர்கள் கண்டறிந்தனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி ஒன்றியம் மணவாரனப்பள்ளி ஊராட்சி கங்கமடுகு கிராமத்தில், முதுகலை ஆய்வுக்காக கள ஆய்வு மேற்கொண்டபோது, 17 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பறை இசைக்கலைஞனின் நடுகல்லை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை பட்ட மாணவர் அசோக்குமார் மற்றும் பட்ட ஆய்வாளர் செல்வமணி ஆகியோர் கண்டறிந்தனர்.

இதுகுறித்து வரலாற்று பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: ''கடந்த ஓர் ஆண்டாக முதுகலை பட்ட ஆய்வுக்காக நாச்சிகுப்பம், மணவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், கள ஆய்வு மற்றும் புராதன சின்னங்களை ஆவணப்படுத்தும் பணியினை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத் துறை முதுகலை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக மணவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கமடுகு என்ற கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது, திம்மராஜ் என்பவரின் வீட்டின் அருகில் உள்ள ராமே கவுடு மற்றும் லட்சுமே கவுடு என்ற பெயரில் வழிபாட்டில் உள்ள 13 நடுகற்கள் கண்டறியப்பட்டன. அவை 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் ஆகும். அதில் 11 நடுகற்கள் போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்டது. இரு நடுகற்கள் இசைக் கலைஞர்களுக்காக எடுக்கப்பட்டதாகும்.

தமிழ்நாட்டிலேயே நடுகற்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டம் கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களின் எல்லையாக அமைந்துள்ள மாவட்டம் ஆகும். எனவே இப்பகுதியில் சங்ககால சிற்றரசர்கள், பல்லவர்கள், சங்கர்கள், நுளம்பர்கள், வாணர்கள், சோழர்கள், போசளர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களால் இப்பகுதி ஆட்சி செய்யப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மற்றும் வடமேற்கில் இருந்து வரும் படையெடுப்புகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் நுழைவு வாயிலாக இருந்துள்ளது. அதேபோல் தாக்குதலுக்கு முதலில் எளிதாக இலக்காக்கக் கூடியதும் இம்மாவட்டமே. எனவே இப்பகுதியில் பல போர்கள் நடைபெற்றுள்ளன. அவ்வாறு நடைபெற்ற போர்களில் வீரமரணம் அடைந்தோர்களுக்கு உறவினர்கள் அவர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் நடுகல் எடுக்கப்படுவது வழக்கம்.

இம்மாவட்டம் மலைகளும், காடுகளும் நிறைந்த பகுதி. எனவே இம்மாவட்டத்தில் ஆநிரைகளை (ஆட்டுமந்தை, மாட்டு மந்தைகள்) கைப்பற்றுவதற்காகவும், கைப்பற்றிய ஆநிரைகளை மீட்பதற்காகவும் நடந்த போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், விலங்குகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கும் போரில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. மாடுபிடியில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பானர்களுக்கும், இசைச் கலைஞர்களுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இம்மாவட்டத்தின் கங்கமடுகு கிராமத்தில் பறை அல்லது தப்பு இசைக் கலைஞருக்கு எடுக்கப்பட்ட நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லில் பறை இசைக் கலைஞர் ஒருவர் பறை இசைக் கருவியை தன்னுடைய இடது தோள் பகுதியில் கைக்குள் பறையோடு இணைக்கப்பட்டு மாட்டிக் கொண்டு இடது கையில் பிடித்துக் கொண்டு இடது தோளின் பக்கவாட்டில் பறையை அணைத்துக் கொண்டு வலது பக்கமாக பறை இசைக் கலைஞர் லேசாக சாய்ந்தவாறு மெய்மறந்து இசையை ரசித்து பறையை அடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் பறை இசைக் கலைஞர் பறை அடிக்க வலது கையில் அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சியும், இடது கையில் சிம்புக்குச்சி அல்லது சுண்டுகுச்சியும் பறையை இசைப்பது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பறை இசைக்கும் கலைஞரின் தலைமுடி முன்னும் பின்னும் இசைக்கு தகுந்தாற்போல் அசைவது போல் காட்டப்பட்டுள்ளது. பறை இசைக் கலைஞர் கால் சட்டை அணிந்திருப்பது போல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்களில் தண்டைகள், வலது கையில் மட்டும் காப்பு, கழுத்தில் ஒரு அணிகலன் மற்றும் கலைஞரின் உருவத்திற்கு பின்னாள் உறைவாள் ஒன்றும் கீழ் நோக்கி காட்டப்பட்டுள்ளது.

மேலும் பறை இசைக்கலைஞரின் அருகில் அவருடன் சேர்ந்து இறந்துபோன அவருடைய மனைவியின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. அவருடைய வலது கையில் பறை அடிக்கும் குச்சி ஒன்றும் இடது கையில் மதுக்குடுவையும் பிடித்துள்ளார். இத்துடன் கழுத்தில் ஆறமும், கைகளில் தண்டையும், இடுப்பில் ஒட்டியானமும் அணிந்துள்ளது போல் காட்டப்பட்டுள்ளது. இங்கு சிற்பமாக உள்ள இந்த பறை இசைக் கலைஞர் அப்பகுதியில் பெயரும், புகழும் பெற்ற சிறந்த பறை இசைக் கலைஞராக போற்றப்படக் கூடியவராக இருந்திருக்கலாம். எனவே இத்தகைய சிறந்த கலைஞரை அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை சிறப்பிக்கும் வகையில், அவரையும், அவருடைய மனைவியின் நினைவை போற்றும் வகையிலும் இந்த நடுகல்லை எடுத்துள்ளனர். இத்தகைய அறிய புதிய கண்டுபிடிப்புகள் தமிழினத்தின் தொன்மையான அடையாளங்களை மீட்டெடுக்கிறது. அத்தோடு பறை, சங்க காலம் முதல் தகவல் தொடர்பு சாதனமாகவும் விளங்குகிறது.'' இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x