Published : 15 Apr 2023 03:26 PM
Last Updated : 15 Apr 2023 03:26 PM

புதுச்சேரி | கோயில் வணிக வளாகத்தில் காங். எம்எல்ஏவுக்கு கடை ஒதுக்க தடை கோரி மனு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: புதுச்சேரி கொஞ்சும்கிளி மாரியம்மன் கோயிலின் வணிக வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேசுக்கு கடை ஒதுக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த ஜீவரத்தினம் உட்பட 5 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், "புதுச்சேரி சண்முகபுரத்தில் உள்ள கொஞ்சும்கிளி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்காக, கொஞ்சும் கிளி மாரியம்மன் கோயில் என்ற பெயரில் வங்கியில் கடன் பெற்று கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், டெண்டர் எதுவும் கோராமல், பல்வேறு முறைகேடுகள் மூலம் தரமற்ற பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வரும் இக்கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்தது.

கோயில் வணிக வளாகத்தில் கட்டப்படும் 6000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை குத்தகைக்கு பெற தேசியமயமாக்கப்பட்ட வங்கி தயாராக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கதிர்காமம் தொகுதியின் எம்எல்ஏ கே.எஸ்.பி.ரமேஷுக்கு ஒதுக்க கோயிலின் சிறப்பு அதிகாரியான சக்கரவர்த்தி என்பவர் செயல்படுகிறார். கோயிலின் அன்றாட அலுவல்களை திறம்பட அவர் மேற்பார்வை செய்வது இல்லை. கோயிலுக்கு அருகிலேயே எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ள நிலையில் அதற்கு மாற்றாக கோயில் இடத்தையும் ஒதுக்கும் நோக்கில், தான் ஒரு சிறப்பு அதிகாரி என்பதை மறந்து சக்ரவர்த்தி செயல்பட்டு வருகிறார்.

எனவே, இக்கட்டுமான பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். கோயில் வணிக வளாகத்தில் கதிர்காமம் எம்எல்ஏவுக்கு இடம் ஒதுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். கோயிலின் சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தியை பதவியில் இருந்து திரும்ப பெற உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x