Last Updated : 04 Sep, 2017 11:03 AM

 

Published : 04 Sep 2017 11:03 AM
Last Updated : 04 Sep 2017 11:03 AM

தன்னார்வலர்கள் உதவியுடன் ஆதரவற்றோரை மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்கும் அரிய பணியில் போலீஸ்: அனைத்து மாவட்டங்களிலும் பணியை விரிவுபடுத்த திட்டம்

பிஹாரை சேர்ந்தவர் காந்தி. சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். குடும்பமும், போலீஸும் அவரைத் தேடியது. ஆனால் கிடைக்கவில்லை. அவர் பலியானதாகக் கிடைத்த தகவலை நம்பி அவருக்கு இறுதிச் சடங்கு நடந்தது. வழக்கம்போல 12-ம் ஆண்டு நினைவஞ்சலிக்கு குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்தபோது, ‘காந்தி இறக்கவில்லை. சென்னையில் உள்ளார்’ என தகவல் கிடைத்தது. கிராமமே ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்த நேரம், மனநலம் பாதித்த காந்தியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளது தமிழக போலீஸ். உதாரணத்துக்கு இது ஒரு சம்பவம்.

கடந்த ஓர் ஆண்டில் இப்படி மனநிலை பாதித்து வீட்டைவிட்டு பிரிந்து வந்த 101 பேரை அவரவர் சொந்த பந்தங்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர் தமிழக காவல்துறை மாநில குற்ற ஆவணக் காப்பக போலீஸார். இப்பணியை நிறைவேற்றிய போலீஸார் குழுவை மாநில குற்ற ஆவணக் காப்பக காவல்துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் சமீபத்தில் பாராட்டி கவுரவித்துள்ளார்.

உள்ளூர் போலீஸ் உதவி

மாநில குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளர் ஏ.எஸ்.தாஹிரா கூறும்போது,‘காணவில்லை என தினமும் ஏராளமான புகார்களை போலீஸார் பதிவு செய்கின்றனர். அதில் மனநலம் பாதித்தவராகவோ, மாநிலத்தைத் தாண்டி சென்றுவிட்டாலோ கண்டுபிடிப்பது சிரமம். 2015-ல் வேலூர் பாகாயத்தைச் சேர்ந்த ஹம்சவேணி என்பவர் உத்தராகண்ட்டில் இருப்பது அங்குள்ள தன்னார்வலர்கள் மூலம் தெரியவந்தது.

அவரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அவரைப் போல சென்னையில் ஏராளமானோர் இருப்பார்களே, அவர்களையும் மீட்டு குடும்பங்களிடம் ஒப்படைக்கலாமே என ஏடிஜிபி அறிவுறுத்தினார். தன்னார்வலர்கள் உதவியால் ஆதரவற்றோர்களை சந்தித்து பேசினோம். 10 பேரை சந்தித்தால், அதில் 2 பேரிடமிருந்துதான் தகவல்கள் முழுமையாக கிடைக்கும். அதில் பலருக்கு மொழி தெரியாது, இன்னும் பலருக்கு எங்கு இருக்கிறோம் என்பதே தெரியாது. கிடைத்த தகவல்களை வைத்து உள்ளூர் போலீஸார் உதவியுடன் அவர்களை குடும்பங்களுடன் சேர்க்கிறோம்’ என்றார்.

தூதரக உதவி நாடப்படும்

நாடுமுழுவதும் இதுவரை 101 பேரை அவரவர் குடும்பங்களிடமும், அடையாளம் தெரியாத வகையில் இறந்துபோன 165 பேரை அடையாளம் கண்டும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்கி தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பதிவு பெற்ற காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோரின் தகவல்களை இணையதளத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் மீட்கப்படும் அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களை அவரவர் தேசங்களுக்கு அனுப்பி வைக்க தூதரக உதவியை நாடவும் ஆலோசித்து வருகின்றனர்.

மாநில குற்ற ஆவணக் காப்பக காவல்துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் கூறும்போது, ‘இருதரப்பு ஒப்புதலோடு ஆதரவற்றவர்கள் அவர்களது குடும்பங்களிடம் சேர்க்கிறோம். சேவை அடிப்படையில் சாதாரணமாக தொடங்கிய இப்பணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதரவற்றோரை மீட்க, அந்தந்த மாவட்ட ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தன்னார்வலர்கள் உதவியை நாடியுள்ளோம். வரையறுக்கப்பட்ட பணியாக இல்லாமல் சேவையாகவே இதை போலீஸார் செய்து வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x