Published : 12 Apr 2023 05:05 AM
Last Updated : 12 Apr 2023 05:05 AM

தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம்: சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 61 தொகுதிகளில் விளையாட்டு அரங்கம் உள்ளது. எஞ்சிய 173 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். முதல்கட்டமாக கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 10 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும். அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் ரூ.42 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

சென்னையில் உள்ள 5 முக்கிய விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடியில் மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தப்படும். கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஹாக்கி முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூ.7 கோடியில் அமைக்கப்படும். நாட்டிலேயே முதல்முறையாக 6 மாவட்ட விளையாட்டு அரங்குகளில் ரூ.6 கோடியில் பிரத்யேக பாரா-விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.3 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம் நிறுவப்படும். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ரூ.3 கோடியில் அமைக்கப்படும். இந்த ஆண்டில் சென்னை ஸ்குவாஷ் உலகக் கோப்பை நடத்த ரூ.1.50 கோடி ஒதுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கான அகாடமி அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் ‘நம்ம ஊரு விளையாட்டு திடல்’ அமைக்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு கொள்கை கொண்டு வரப்படும். சென்னையில் உலகத் தரத்தில் துப்பாக்கி சுடுதலுக்கான சிறப்பு அகாடமி அமைக்கப்படும்.

61 தொகுதிகளில் விளையாட்டு அரங்கம் உள்ளது. எஞ்சிய 173 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். முதல்கட்டமாக கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம், ஆலங்குடி, காரைக்குடி ஆகிய 10 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 1,594 பேருக்கு ரூ.40.18 கோடி பரிசுத் தொகைவழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், நிறுவன சமூக பொறுப்பு திட்டம் மூலம் ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதையும் தாண்டி 13 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டிக்கெட் பற்றி எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார். கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்படவில்லை. அப்படியிருக்க, யாருக்கு டிக்கெட் வாங்கித் தந்தனர் என்று தெரியவில்லை. சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தபோது, கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் 150 பேரை என் சொந்த செலவில் அழைத்துச் சென்றேன். ஐபிஎல் போட்டிகளை நடத்தும் பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்தான் உள்ளார். அவர் உங்களுக்கு வேண்டியவர் என்பதால் நீங்கள் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுங்கள். பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x