Last Updated : 12 Apr, 2023 06:20 AM

 

Published : 12 Apr 2023 06:20 AM
Last Updated : 12 Apr 2023 06:20 AM

லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல தேனியில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம் கோட்டூர் அருகே மதுரை குடிநீர் திட்டப் பணிகளுக்காக நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணி.

உத்தமபாளையம்: மதுரை மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், லோயர் கேம்ப்பில் முல்லைப் பெரியாறு குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து வழிநெடுகிலும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் மதுரையில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முல்லைப் பெரியாறு குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து தினமும் 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறுவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சலவைத்துறை பகுதியில் தடுப்பணை அமைத்து, அதன் அருகில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட ராட்சத தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு அமையவுள்ள தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீரை இரும்பு குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைப்பட்டிக்கு கொண்டுசெல்லவும், அங்கு இந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் குழாய் வழியே மதுரைக்கு கொண்டுசெல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,295.76 கோடியாகும். தற்போது, லோயர் கேம்ப்பில் ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து தண்ணீரை கொண்டு செல்வதற்கான ராட்சத குழாய்கள், ஆங்காங்கே சாலையோரங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களை பள்ளம் தோண்டி பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இன்னும் 3 மாதங்களில் லோயர் கேம்ப் தலைமதகுப் பகுதியில் நடைபெறும் பணிகள் முடிவுற்று பண்ணைப்பட்டி வரை ஆற்று நீர் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அடுத்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, ரூ.1,295.76 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

லோயர் கேம்ப்பில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து 96 கி.மீ. தூரம் உள்ள பண்ணைப்பட்டி வரை சுத்திகரிக்கப்படாத நீர் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும். தற்போது, தேனி மாவட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கற்பாறைகள் அதிகம் உள்ளதால், அவற்றை உடைத்து குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x