Published : 10 Apr 2023 06:06 AM
Last Updated : 10 Apr 2023 06:06 AM

ரூ.230.63 கோடி இலக்கில் ரூ.162.33 கோடி வருவாயுடன் வரி வசூலிப்பில் தாம்பரம் மாநகராட்சி முதலிடம்

தாம்பரம்: சொத்து வரி உட்பட வரியினங்கள் வசூலிப்பில் சென்னை தவிர்த்து தமிழக அளவில் தாம்பரம் மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது. ரூ.230.63 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.162.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் நாகர்கோவிலும் 3-வது இடத்தில் சிவகாசியும் கடைசி இடத்தில் கடலூர் மாநகராட்சியும் உள்ளன.

தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு,தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 20 மாநகராட்சிகள் உள்ளன. சொத்துவரி வசூலிப்பை அதிகரிப்பதன் மூலம் மாநகராட்சியின் நிர்வாக செலவுகளை தடையின்றி மேற்கொள்வதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

மேலும் குடிநீர் வரி, காலி மனைவரி, தொழில் வரி, கடை வாடகை,பாதாள சாக்கடை உள்ளிட்ட வரியினங்களை வசூலிப்பதன் மூலம்மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 2022-23-ம்ஆண்டில் மாநகராட்சிகளின் சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி இனங்கள் குறித்த மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இதில், நிலுவை மற்றும் நடப்பு ஆண்டுக்கான வரி வசூலில், 70.39 சதவீதத்துடன் தாம்பரம் மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில் நாகர்கோவிலும் (69.72 சதவீதம்) மூன்றாம் இடத்தில் சிவகாசியும் (69.42சதவீதம்) உள்ளன. கடைசி இடத்தில் கடலூர் மாநகராட்சி இடம் பெற்றுள்ளது.

சொத்து வரி வசூலிப்பில் மட்டும் கோவை முதலிடத்திலும், காஞ்சிபுரம் இரண்டாவது இடத்திலும், ஈரோடு மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதில் தாம்பரம் மாநகராட்சி, 7-வது இடம் பிடித்துள்ளது. கடைசியாக சேலம் மாநகராட்சி 20-வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியில் 70வார்டுகள் உள்ளன. இம்மாநகராட்சியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 57,432 ஆகும். இதில், சொத்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 12,137 ஆகும்.

இதுமட்டுமின்றி, குடிநீர் வரி, காலிமனை வரி, தொழில் வரி, கடை வாடகை, பாதாள சாக்கடை உள்ளிட்ட வரியினங்களில், தாம்பரம் மாநகராட்சியில் இந்த ஆண்டில் வரி வசூல் ரூ. 230.63கோடி நிர்ணயிக்கப்பட்டு, அவற்றைவசூல் செய்யும் பணி நடந்து வந்தது.

சிறப்பு முகாம்கள்: இதற்காக, 17 இடங்களில் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டன. இது தவிர, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அதேபோல்ஆட்டோ மூலம் தீவிர பிரச்சாரமும் செய்யப்பட்டது. செல்போன் மூலம்குறுந்தகவலும் அனுப்பப்பட்டது. வரிவசூல் என்பது மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்தது. இதில், 70.39 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.162.33 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரியினங்கள் வசூலிப்பதில் தமிழகத்தில் முதல்இடம் பிடித்துள்ளோம் என்பது பெருமையாக உள்ளது.

மாநகராட்சியாக உயர்ந்தபின் வரிவிதிப்பில் அதிக தொகை மாற்றம் செய்யப்பட்டதாக எதிர்ப்புவந்த நிலையிலும், ஏற்ெகனவே கடைநிலை ஊழியர் முதல், அலுவலக பணியாளர்கள் வரை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளபோதும் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு சிறப்பாக வரி வசூல் செய்துள்ளோம். இந்த நிதி ஆதாரத்தை கொண்டு சிறப்பாக மாநகராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x