Last Updated : 19 Sep, 2017 02:58 PM

 

Published : 19 Sep 2017 02:58 PM
Last Updated : 19 Sep 2017 02:58 PM

கோவையில் தொடருகிறது பருவமழை: ஆர்ப்பரிக்கும் ஆறுகளால் நிறைந்து வரும் நீராதாரங்கள் - நொய்யலில் வழிபாடு; பவானியில் தொடரும் எச்சரிக்கை

தொடர்மழையால் கோவை மாவட்டம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யல், பவானி ஆறுகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

கோவை மாவட்டத்தில் பெரும் இடைவெளிக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளத்தை ஒட்டிய பகுதி என்பதால் மேற்கு மலைத் தொடரில் வழக்கத்தை விட கூடுதலாக மழைப் பொழிவு காணப்படுகிறது.

இதனால் கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் பல வருடங்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை நிலத்தை குளிர்வித்துக் கொண்டிருந்த மழை, நேற்று காலை பிரவாகம் எடுத்தது. சிறுவாணி, வெள்ளிங்கிரி மலைக் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் நொய்யலும் சீறியது. செந்நிறத்தில் பாய்ந்தோடிய வெள்ளம், நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே சென்றது.

இதுவரை புதர்மண்டி, ஆக்கிரமித்து, வறண்டு கிடந்த ஆற்று மணலில் கரை புரண்டு ஓடியது. காலை 10 மணியளவில் பேரூர் படித்துறையை மூழ்கடித்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே வேடப்பட்டி தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து பெருக்கெடுத்த வெள்ளத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில் நேற்று மாலை நொய்யல் நதியை வரவேற்று, வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. பூ தூவி, நவதானியங்கள், மஞ்சள் படையலிட்டு வழிபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகக் குரலில் நொய்யல் அன்னையை வரவேற்றனர். நொய்யலில் வெள்ளம் அதிகரித்ததையடுத்து உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் இரண்டுக்கும் நீர் வரத்து அதிகமானது. இரண்டு குளங்களின் நீர்வழிப்பாதைகளும் உடனே சுத்தம் செய்யப்பட்டன. அடுத்ததாக வெள்ளலூர் குளம் மட்டுமே எஞ்சியிருப்பதால் அதற்கான ராஜவாய்க்காலை சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பேரூர் நொய்யலில் தீயணைப்புத்துறையினர் வெள்ள விபத்தை தடுக்கும் ஒத்திகை நடத்தினர். மாலை 4 மணியளவில் நொய்யல் நீர் கோவை மாவட்டத்தைக் கடந்தது. சோமனூர், சாமளாபுரம், செம்மாண்டம்பாளையம் அணை, பெரியபுத்தூர் சாலை வழியாக திருப்பூரில் நுழைந்தது.

சிறுவாணி

சிறுவாணி அணைக்கு கணிசமான நீர் வரத்து தொடர்கிறது. அதேசமயம் அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் 54 மில்லியன் கன அடியாக அதிகப்படுத்தப்பட்டது. நேற்று மழை சற்று நிதானித்ததால் எடுக்கப்படும் நீரின் அளவு சராசரியாக 44 மில்லியன் கன அடியாக குறைக்கப்பட்டது. 52 அடியுள்ள அணையில் 39 அடியைத் தாண்டி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சராசரியாக 140 மில்லி மீட்டர் மழை நீடிக்கிறது.

பவானி

எப்போதும் நீர்மட்டம் அதிகமாகவே காணப்படும் பில்லூர் அணை, வறட்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு கொள்ளளவை எட்டாமலேயே இருந்தது. இருந்தாலும் கோவையின் நீர்த் தேவையை பூர்த்தி செய்தது. தற்போது தொடர்ந்து 2 நாட்களாக அணை நிறைந்து நிற்கிறது. 4 மதகுகளிலும் உபரிநீர் வெளியேறுகிறது. பவானியில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இந்த சூழல் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. மாலை 4 மணியளவில் அந்த அளவு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து வெளியேறும் நீர் குறைந்தாலும், கல்லார், காந்தையாறு, மாயாற்றிலும் நீர் வரத்து இருப்பதால் பவானியில் வெள்ளப்பெருக்கு குறைந்தபாடில்லை. பவானியில் விநாடிக்கு சுமார் 26 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் பவானிசாகர் அணை மிக வேகமாக நிரம்புகிறது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சிறுமுகையின் லிங்காபுரம், அம்மன்புதூர், காந்தவயல், ஜெ.ஜெ.நகர், புதுக்காடு, குணுக்குமடுவு உள்ளிட்ட பகுதிகள் அணையின் நீரில் மூழ்கியுள்ளன. அணை நிர்வாகத்தில் அனுமதி பெற்று, நீர்பிடிப்பு பகுதியில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நீர் தேங்கியதால் இங்கு பயிரிட்டிருந்த சுமார் 1.5 லட்சம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மூழ்கியது பரளிக்காடு

கோவை குற்றாலம் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மூடப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டும் அதை அறியாமல் பலரும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான பரளிக்காட்டில் வனத்துறையின் சூழல் சுற்றுலாவும் ரத்தானது. வார இறுதி இரு நாட்களில் இங்கு நடக்கும் சூழல் சுற்றுலாவில் படகு சவாரி, பறவைகள் பார்ப்பது உள்ளிட்டவை அடங்கும். பில்லூர் அணை நிறைந்திருப்பதால் பரளிக்காடு சூழல் சுற்றுலா தலம் மூழ்கியது. அனுமதி ரத்தானதால், முன்பதிவு செய்த 100-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சுத்தப்படுத்திய மீனவர்கள்

கோவை உக்கடம் பெரியகுளத்துக்கு வரும் வாய்க்காலின் பெரும்பகுதி சாக்கடை, புதர், பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமித்து அடைபட்டுக் கிடந்தது. நேற்று வெள்ளம் வந்ததும் நீர் திசைமாறி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. உடனடியாக ஆக்கிரமிப்பையும், அடைப்பையும் நீக்க அங்கிருந்த 85 மீனவர்கள் களம் இறங்கினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி நீரை குளத்துக்கு திருப்பிவிட்டனர். பொதுப்பணித் துறையும், மாநகராட்சியும் கைவிட்ட நிலையில் மீனவர்களின் செயலை அங்குள்ள மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x