

சென்னை விமான நிலைய புதிய முனையம் - பிரதமர் திறந்து வைத்தார்: சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் முனையத்தை பார்வையிட்டு கொண்டு இருக்கும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கொஞ்சம் விலகி நின்று கொண்டு இருந்தார். அப்போது, முதல்வரை அருகில் அழைத்த பிரதமர் மோடி, முதல்வரின் கையைப் பிடித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்றார். 'Gandhi's Travel in TamilNadu' என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் வழங்கி வரவேற்றார்.
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடங்கி வைத்தார்: சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயிலான இது இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயிலாகும். முன்னதாக, சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் ஏறி பயணம் மேற்கொள்ள இருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பின்னர், சென்னை - பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை - பல்லாவரம் நிகழ்ச்சிக்கு, பிரதமர் மோடி வருவதற்கு முன்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மேடைக்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது திமுக தொண்டர்கள் ‘பெரியார் வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினார். இதற்கு பதிலடியாக பாஜக தொண்டர்கள் ‘மோடி வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை நிகழ்வில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பேச்சு: சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “ராமகிருஷ்ண மடத்தை நான் எப்போதும் உளப்பூர்வமாக மதிப்பேன். இந்த மடம் என் வாழ்வில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. எனக்கு தமிழக மக்கள் மீது மிகுந்த ஈர்ப்பு இருக்கிறது. நான் தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கிறேன்" என்றார்.
அதன்பின்னர், சென்னை - பல்லாவரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. எனவே, இது புதிய நம்பிக்கை, ஆற்றல், எதிர்பார்ப்பு, ஆரம்பதுக்கான நேரம். புதிய தலைமுறையினருக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும், பல புதிய திட்டங்களுக்கான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டுள்ளன. சாலை, ரயில் வழித்தடங்கள், விமான மார்க்கத்தை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான உற்சாகத்தை அதிகரிக்கும்” என்று பேசினார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தின் முன்னோடியாக திகழும் அண்ணாவின் பெயரில் உள்ள விமான நிலையம் திட்டம், வந்தே பாரத் என பல திட்டங்களுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளரும், கூட்டாட்சி தத்துவம் வளரும்” என்றார்.
“சுரங்க ஏலம் ரத்து - தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி”: நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது ‘டெல்டாக்காரராக முதல்வருக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளதற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
“தெலங்கானாவில் ஊழலுக்கு குடும்ப ஆட்சியே காரணம்”- பிரதமர்: செகந்தராபாத் - திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் தொடக்கவிழா, ரூ.11,355 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
இதையடுத்து நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ''தெலங்கானாவில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. மாநில அரசின் ஒத்துழையாமை காரணமாக மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாகின்றன. தெலங்கானாவில் தவறான அரசு நிர்வாகத்திற்கும், ஊழலுக்கும் குடும்ப ஆட்சியே காரணம். ஒட்டுமொத்த மாநிலத்தின் அதிகாரமும் ஒரு சிலரது கைகளில் குவிந்துள்ளது. அவர்கள் விஷயத்தில் தெலங்கானா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்". என்று தெரிவித்தார்.
அதானி விவகாரம்: காங்கிரஸ் Vs தேசியவாத காங்கிரஸ் : அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு அமைத்திருப்பதால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ''ஒரு காலத்தில் அரசை குறைகூற வேண்டும் என்றால் டாடா, பிர்லா ஆகியோரை இழுப்பது வழக்கமாக இருந்தது. அந்த இடத்தில் தற்போது அம்பானியும், அதானியும் இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் குறிவைக்கப்படுவதை நான் ஏற்க மாட்டேன்” என்றார்.
இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே இருக்கும் ஆழமான தொடர்பை உச்ச நீதிமன்ற விசாரணைக் குழுவால் வெளிக்கொண்டு வர முடியாதும், அது நாடாளுமன்றக் குழுவால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளது.
முத்ரா திட்டத்தில் 8 ஆண்டுகளில் ரூ.23.20 லட்சம் கோடி கடன்: முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் 24, 2023 வரை இத்திட்டத்தின் கீழ் 40.82 கோடி பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.23.20 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
‘விடுதலை’ படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு: ‘விடுதலை’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா - இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சுகோய் போர் விமானத்தில் பயணித்த குடியரசுத் தலைவர்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக சனிக்கிழமை சுகோய் 30 போர் விமானத்தில் பயணம் செய்தார். அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்திலிருந்து அவர் புறப்பட்டார். அவர் பயணத்திற்காக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் போர் விமானத்தில் பயணித்த இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கோவிட் பரவத் தொடங்கியது எப்படி? - சீன ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்: கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறும்போது, “வுஹான் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில், அவை காட்டு விலங்குகளின் மரப்பணுகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன்மூலம் கரோனா வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளது.