தமிழகத்தில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் 

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தார். அங்கிருந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை - கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். சாலை வழியாக மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், அங்கு உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர், சாலை வழியாக ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன்படி, தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.2,400 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழகத்திற்கு, கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஆகியவற்றுக்கு பக்தர்கள் வசதியாக பயணம் செய்வதை இது உறுதிசெய்யும். மேலும், மதுரையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த ரயில்சேவை கோவை, திருவாரூர், நாகப்பட்டிணம் பயணிகளுக்கு பயனளிக்கும். மேலும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.294 கோடியில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதை நாகை மாவட்டம் அகஸ்தியம் பள்ளியில் இருந்து உப்பு ஏற்றிச்செல்ல இது உதவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in