

மசோதாக்கள் நிலுவை, போராட்டங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், நாகரிகமாக அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது பொருள். நிலுவை என்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் தரவில்லை என்பது பொருள் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறுகிறது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
மேலும், “சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமா ஆகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஒரு அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்கு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று அவர் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமைஇந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது மாணவரின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர், "வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படித்தான், தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும்போது போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழிஞம் துறைமுகம் கொண்டு வரக்கூடாது என்று வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இதுபோன்ற நிதிகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ''ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகாரத் திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்'' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
"ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதிலிருந்து அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட கூடாது என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இக்கருத்துக்கள் அரசியல் சாசன வரம்புகளை மீறிய அடாவடித்தனமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் எவ்வித முடிவும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால் அவை நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ஆளுனர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
கிண்டியில் ரூ.175 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளிகொளத்தூரில், 28 ஏக்கரில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று சிட்கோ மூலம் அமைக்கப்படும். கிண்டியில் ரூ.175 கோடியில் தொழில்முனைவோருக்கு பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும். தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இதனிடையே, ரூ.600 கோடியில் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்; ரூ.70 கோடியில் காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.
ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 5000-ஐ கடந்தது: இந்தியாவில் புதன்கிழமை ஒரே நாளில் புதிதாக 5,335 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 25,587 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதிக்கு பின்னர் நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 5,000-ஐ கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை: மோடி: பாஜக தொடங்கப்பட்டதன் 44-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கட்சியினருக்காக உரையாற்றினார். இதில் பேசும்போது, “எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை. சிறிய அளவிலான இலக்குகளையே நிர்ணயித்து அதிலேயே அவை திருப்தி அடைந்து விடுகின்றன. மிகப் பெரிய கனவுகளைக் காண்பதிலும், மிகப் பெரிய இலக்குகளை அடைவதிலும் பாஜக நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எண்ணியதில்லை” என்று அவர் பேசினார்.
“பாஜக செயல்களில் ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை”: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக் கொடி பேரணி நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, விஜய் சவுக் வரை சென்றது. அதனைத் தொர்ந்து மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ''ஜனநாயகம் குறித்து நரேந்திர மோடி அரசு நிறைய பேசுகிறது. ஆனால், அவர்களின் செயல்களில் அது பிரதிபலிப்பதில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். அதன் பிறகும் அவர் தனது லண்டன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. அவர்களின் செயல், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதாக உள்ளது" என்றார்.
“ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறார்”: பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறுவதன் மூலம் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மகன் பாஜகவில் இணைந்தார்: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சோனியா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும் கருதப்படுபவர் ஏ.கே.அந்தோணி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது மகனான அனில் அந்தோணி, டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில் வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தார்.
கலாஷேத்ரா விவகாரம்: நடிகை அபிராமி ஆவேசம்: "கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை" என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.