Published : 06 Apr 2023 06:57 PM
Last Updated : 06 Apr 2023 06:57 PM
சென்னை: "தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் எவ்வித முடிவும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால், அவை நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வரும் கருத்துகள் அபத்தமானது, மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் எவ்வித முடிவும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால் அவை நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை.எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடைபெற்ற போராட்டம் என்று ஆளுநர் கூறியிருப்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
போராடிய மக்களை, தியாகம் செய்த மக்களை அவமானப்படுத்தும், செயலில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.ஆளுநர் தான் வசிக்கும் மிக உயரிய பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக் கூறுவதற்கு மாறாக, உயர்ந்தபட்ச பொறுப்பை அவமதிக்கும் செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது அவர் ஓர் பொறுப்பற்ற மனிதர் என்பது வெளிப்படையாகியுள்ளது.
அத்துமீறி செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்து பல மாதங்களாகிவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் மதிக்க தவறிய காரணத்தால் ஆளுநர் அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார். மொத்தத்தில் ஆளுநர் ரவி தனக்களிக்கப்பட்டுள்ள கடமையை உணர்ந்து செயல்படவில்லை.
மாறாக தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு, தமிழக ஆட்சிக்கு எதிராக செயல்பட ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ரவி, ஒன்றிய அரசின் நோக்கத்தை நிறைவேற்றி வருவதன் மூலம் தமிழக மக்களை ஆத்திரமூட்டலுக்கு இரையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் தங்களது மிகக் குறுகிய அரசியல் நோக்கத்தை ஒன்றிய அரசும், ஆளுனரும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள். இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின் அத்துமீறிய செயலுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து வெளியேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT