Published : 05 Apr 2023 03:08 PM
Last Updated : 05 Apr 2023 03:08 PM

“முதல்வர் கடிதம் எழுதுவதால் நிலக்கரி சுரங்கப் பிரச்சினை தீராது. ஏனெனில்...” - இபிஎஸ் விளக்கம்

சென்னை: "நிலக்கரி சுரங்க விவகாரத்தை, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதை விடுத்து கடிதம் எழுதுவது, அமைச்சரை சந்தித்தார் என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்கு சொல்வதுதான்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஏற்கெனவே என்எல்சி நிறுவனத்துக்காக கிட்டத்தட்ட 105 கிராமங்களில் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டுவிட்டன. அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் சூழலில், இன்றைக்கு மூன்று இடங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மற்றும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டி ஆகிய 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது. தமிழக மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது இந்த டெல்டா மாவட்டம். அந்தப் பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த தொழிற்சாலைகளும் அமைக்கக்கூடாது என்பதுதான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களின் முக்கிய அம்சம். இந்நிலையில் மத்திய அரசு இந்த பகுதியில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் கோரியிருக்கும் செய்தி, வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், 2022ல் திமுக எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார். அப்போதே இந்தப் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவிருந்தது குறித்த செய்தி தெரியவந்துள்ளது. திமுக அரசு அந்த சமயத்திலேயே மத்திய அரசுடன் பேசி இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த அரசு அதை செய்ய தவறிவிட்டது.

திமுக ஆட்சியில்தான் மீத்தேன் எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கான ஒரு வழி திறந்துவிடப்பட்டது திமுக ஆட்சியில்தான். இதிலிருந்துதான் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசு அந்த சமயத்தில் இதை தடுத்திருந்ததால், மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது செய்திருக்கமாட்டார்கள். எனவே இதற்கு காரணம் திமுக அரசுதான்.

தமிழக அரசாங்கம் தொடர்புடைய பிரச்சினையாக இருந்தால், சட்டமன்றத்தில் பேசலாம். இது மத்திய அரசு தொடர்புடைய பிரச்சினை. எனவே முதல்வர் வெறுமனே கடிதம் எழுதினால் போதாது. நான் முதல்வராக இருந்த சமயத்தில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின், ஊடகங்களில், மத்திய அரசுக்கு நான் எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதாக கூறுவார். ஆனால், தற்போது முதல்வர் என்ன செய்துகொண்டிருக்கிறார். அவரும் இப்போது கடிதம்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்.

திமுகவுக்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை, வாழ்வாதார பிரச்சினை. எனவே திமுக எம்பிக்கள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதைவிடுத்து கடிதம் எழுதுவது, அமைச்சரை சந்தித்தார் என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்கு சொல்வதுதான்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x