Published : 11 Sep 2017 05:19 PM
Last Updated : 11 Sep 2017 05:19 PM

வாகன சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்: 30 வாகனங்கள் மீட்பு

அண்ணா நகரில் வாகன சோதனையின் போது சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடர்களிடமிருந்து 30 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக சுமார் 50 க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்

சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு உள்ள நிலையில் வாகன திருட்டும் அதே அளவிற்கு அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பரவலாக மோட்டார் சைக்கிள் வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மோட்டார் சைக்கிள் திருடர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அண்ணா நகரில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா ஒன்றில் பதிவான காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆராய்ந்தனர்.

அதில் ஒரு நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடுவது தெரிய வந்தது. பின்னர் தனிப்படை போலீஸார் அந்த மர்ம நபரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த அந்த நபர் நேற்று மாலை அண்ணா நகர் டவர் பூங்கா அருகில் , பைக் ஒன்றை திருட முயற்சி செய்து கொண்டிருந்த போது போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் , அவர் பெயர் தேவராஜ்(46) என்பதும் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனபதும் தெரிய வந்தது. அவர் ஏற்கெனவே தொடர் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடத்தில் விசாரித்ததில் சிறையில் இருந்து வெளியில் வந்த கடந்த மூன்று மாதத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை நோட்டமிட்டு அவைகளை திருடி வந்ததும், அப்படி கடந்த மூன்று மாதங்களில் சுமார் 50 க்கும் அதிகமாக இரு சக்கர வாகனங்களை திருடியதையும் விசாரணையில் ஒப்புக் கொண்டார்.

திருடிய வாகனங்களை ஆரணி , திருவண்ணாமலை , வேலூர், காஞ்சிபுரம்போன்ற பகுதிகளில் அவர் விற்பனை செய்து வந்ததாகவும் , ஒரு பல்சர் பைக்கை 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் , மற்ற இரு சக்கர வாகனங்களை 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் அவர் விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தேவராஜிடமிருந்து 30-க்கும் அதிகமாக மோட்டார் சைக்கிள்களை அண்ணா நகர் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர் இதுவரை அவர் பல்வேறு இடங்களை விற்பனை செய்த வாகனங்களை கைப்பற்றும் முயற்சியிலும் போலீஸார் இறங்கியுள்ளனர்.தேவராஜை திருட்டு வழக்கில் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனங்களை வாங்கிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் இந்த வழக்கு தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ்குமார்(25), ராஜராம்(31), ராமச்சந்திரன்(23) வேலூரை சேர்ந்த சதீஷ்(25) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x