Published : 03 Sep 2017 08:51 AM
Last Updated : 03 Sep 2017 08:51 AM

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவி அனிதாவுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடையடைப்பு, மறியல்

நீட் தேர்வால் மருத்துவர் கனவு தகர்ந்ததால் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சண்முகம். இவரது மகள் அனிதா பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்த வழக்கில், தன்னையும் இணைத்துக் கொண்டு போராடியவர் இவர்.

நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புக்குரிய சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், நீட் தேர்வில் 86 மதிப்பெண்களே பெற்றிருந்த அனிதாவின் மருத்துவர் கனவு தகர்ந்தது.

இதனால் விரக்தியடைந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, அனிதாவின் உடல் குழுமூரில் உள்ள சமுதாயக் கூடம் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று முன்தினம் இரவு வைக்கப்பட்டது.

அனிதா இறந்த செய்தி அறிந்ததும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்புகள் என நீட் தேர்வுக்கு எதிராக கண்டன குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. மாநிலம் முழுவதும் ஆங்காங்கு போராட்டங்கள் வெடித்தன. மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து குழுமூரில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திலும் சில இடங்களில் கடையடைப்பு நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர், கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்தனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், திமுகவின் கொள்கைபரப்புச் செயலாளர்கள் திருச்சி என். சிவா, ஆ.ராசா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் குழுமூருக்கு வந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து கார் மூலம் நேற்று இரவு குழுமூருக்கு வந்து, அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து அனிதாவின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அனிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த குழுமூரிலேயே அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார் ஆகியோர் நேற்று காலை முதல் தங்கியிருந்து நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மேற்பார்வையிட்டனர். அவ்வப்போது அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளையும் அவர்கள் பிறப்பித்தனர். பாதுகாப்புக் கருதி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி ஊர்வலம் செல்லும் வழி நெடுக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x