Published : 01 Sep 2017 09:50 AM
Last Updated : 01 Sep 2017 09:50 AM

முதல்வர், துணை முதல்வரோடு 5 மூத்த அமைச்சர்களை நீக்க வேண்டும்: ஈரோட்டில் திவாகரன் வலியுறுத்தல்

ஊழலில் தொடர்புடைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஐந்து மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற திவாகரன் அளித்த பேட்டி:

தற்போதைய முதல்வர் பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் 19 எம்எல்ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். ஆளுநர் இதனை பரிசீலித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ‘இப்பிரச்சினை ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சினை. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது’ என ஆளுநர் கூறுவதாக வந்த தகவல் முறையானது அல்ல.

தற்போதைய நிலையில், எங்களுக்கு நேரடியாக 19 எம்எல்ஏ.க்களும், மறைமுகமாக 48 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 8 எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் எங்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். மேலும், நடுநிலையாக உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், ஊழல் அமைச்சர்களை நீக்கிவிட்டு, நல்ல ஆட்சியை ஏற்படுத்துங்கள் என்று எங்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய அரசு பெரும்பான்மை இல்லாத அரசு ஆகும். கட்சியையும், ஆட்சியையும் பழனிசாமியால் திறம்பட நடத்த முடியாது. அவரால், ஊழலை கட்டுப்படுத்த முடியாது. இந்த ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தைத் தரவேண்டுமானால், ஊழலில் தொடர்புடைய பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 5 மூத்த அமைச்சர்களை நீக்க வேண்டும்.

கடன் சுமை அதிகரிப்பு

தற்போது அனைத்து துறை ஒப்பந்தங்களிலும், 24 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர். மாவட்ட வன அலுவலர் பணி இடமாற்றத்துக்கு ரூ.10 லட்சமும், அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மாற்றத்துக்கு ரூ.15 லட்சமும், வனத்துறையின்கீழ் நிலையில் உள்ளோர் மாற்றத்துக்கு ரூ.2 லட்சமும் கேட்கப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தின் கடன்சுமை ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 2011 – 16-ம் ஆண்டுகளில் மட்டும், ரூ.2 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். இதனால், மக்கள் மீது் கடன் சுமை அதிகரித்துள்ளது.

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகம் மின் மிகை மாநிலமாகிவிட்டது என்று கூறுகிறார். ஆனால், டெல்டா மாவட்டத்தில் காலையில் 3 மணி நேரம், இரவில் 3 மணி நேரம்தான் மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. தட்கல் முறையில் மின் இணைப்பு எனக் கூறி, முறைகேடு செய்கின்றனர்.

திமுகவை எதிர்க்கிறோம்

நானும், தினகரனும் திமுகவுடன் கூட்டணி சேரப்போவதாக அமைச்சர் ஜெயக்குமார் தவறாகக் கூறி வருகிறார். நாங்கள் மத்திய, மாநில அரசுகளையும், திமுகவையும் எதிர்க்கிறோம். அதனால்தான் எங்கள் மீது போடப்படும் வழக்குகளைச் சந்தித்து வருகிறோம். ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்டியதால்தான், திமுக ஆட்சியில் அவர்கள் மீது வழக்கு போடப்படவில்லை. இப்போதும், அந்தந்த பகுதியில் உள்ள திமுக எம்எல்ஏ-க்களுக்கும் கமிஷன் நேரடியாக சென்றடைகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x