Published : 07 Sep 2017 02:26 PM
Last Updated : 07 Sep 2017 02:26 PM

ஈபிஎஸ், ஓபிஎஸ் இனி அதிமுகவுக்காக மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது: தினகரன்

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இனி அதிமுகவுக்காக மக்களிடம் ஓட்டுகேட்டு செல்ல முடியாது. அவர்கள் மீது மக்கள் அவ்வளவு வெறுப்பில் உள்ளனர் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று (வியாழக்கிழமை) பகல் 12.30 மணிக்கு சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு அளித்த ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெறும் கடிதத்தை அளித்தோம். அந்தக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தினோம்.

மேலும் கடந்த 5-ம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கவில்லை. எனவே அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்பது தமிழகத்துக்கே தெரிந்த செய்தியாகிவிட்டது.

ஆகையால் சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினோம்.

எங்கள் கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் சூழலைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனது கடமையைச் செய்வதாகவும் உறுதியளித்தார்" என்றார்.

ஒன்று போனால் இரண்டு வரும்..

இதுவரை தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவந்த எம்.எல்.ஏ.  ஜக்கையன் திடீரென எடப்பாடி அணிக்கு மாறியது குறித்த கேள்விக்கு, "ஒன்று போனால் இரண்டு வரும். ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வெளியே வருவர். நேற்று இரவு ரயிலில் வரும்போதுகூட என்னிடம் பேசினார். அப்போது தலைமை நிலையச் செயலர் பதவி கேட்டார். ஆனால், காலையில் ரயிலில் இருந்து இறங்கியவுடன் எடப்பாடி அணிக்குச் சென்றிருக்கிறார் என்றால் எது பாதாளம் வரை பாயுமோ அது ஜக்கையன் மீது இப்போது பாய்ந்துள்ளது. அவர் திரும்பி வருவார்.

இத்தகைய குதிரை பேரங்களையும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டி இவற்றை அனுமதிக்கக் கூடாது என்றால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

'இனி மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது'

"எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இனி அதிமுகவுக்காக மக்களிடம் ஓட்டுகேட்டு செல்ல முடியாது. மக்கள் அவ்வளவு வெறுப்பில் உள்ளனர். அதற்கு ஓர் உதாரணம், அனிதாவின் உறவினர்கள் அரசு நிதியுதவியை புறக்கணித்தது. என் வாழ்நாளில் இப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லை. அனிதாவின் தந்தை ஏழை கூலித் தொழிலாளி. அவரது குடும்பம் அரசு நிதியுதவியை மறுக்கிறது என்றால் அரசின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும்" என்று தினகரன் கூறினார்.

அதிமுக குழப்பங்களில் பாஜகவுக்கு பங்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "எங்கள் ஆட்களே (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) எங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். இந்நிலையில் நாங்கள் வேறு நபர்களைப் பற்றி பேச என்னவிருக்கிறது" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x