Published : 02 Apr 2023 12:44 PM
Last Updated : 02 Apr 2023 12:44 PM

அதிகரிக்கும் கரோனா | மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மரத்தான் ஓட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர்

நீலகிரி: அதிகரிக்கும் கரோனா தொற்றை எதிர் கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உதகை நகர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்து, 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் தனது 140-வது மாரத்தான் ஓட்டத்தினை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ச்சியாக பல அலைகள் மூலம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக உலக அளவில் தொற்று இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவிலும் மீண்டும் ஒமிக்கிரான் உருமாறிய தொற்று அதிகரித்துள்ளது. XBB, BA2 போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றன. உலக அளவில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் 50க்கும் கீழே இருந்த தொற்றின் எண்ணிக்கை, தற்பொழுது அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் 300 முதல் 700 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 139 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார அரசு மருத்துவமனைகளில் 11,333 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. உள்நோயாளிகள், புறநோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என மருத்துவமனைகளில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, மருந்து மாத்திரை வசதி ஆகியவை மிகப்பெரிய அளவில் தயார் நிலையில் உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த பதற்றமும் அடைய வேண்டாம். தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்" என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x