Published : 06 Sep 2017 02:49 PM
Last Updated : 06 Sep 2017 02:49 PM

சி.எம்.சி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை தேவை: ஸ்டாலின்

சி.எம்.சி. கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' நீட்டை ஏற்க மறுத்து, உலக புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாணவர் சேர்க்கையை நிறுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றி வந்த இந்தக் கல்லூரி, இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு மத்திய அரசு திணித்த நீட் தேர்வு காரணம் ஆகிவிட்டது மிகவும் கவலை அளிக்கிறது. நீட் தேர்வின் பாதிப்புகளை உச்ச நீதிமன்றம் முன்பு எடுத்துவைத்து, நீட் தேர்வு செல்லாது என்று 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், இக்கல்லூரி தான் முக்கிய வாதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

"மிகவும் பின்தங்கிய பகுதிகளில், ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் - பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது" என்று சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி வெளிப்படையாக அறிவித்து, இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளது. அக்கல்லூரியில் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களையும் 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும், நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து, தனது வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி.

நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் எவ்வளவு மோசமான முறையில் பாதிக்கப்படுவர் என்பதற்கும், சமூக நீதி பாதிக்கப்படுவதற்கும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் இந்த முடிவு வெளிப்படுத்தியிருக்கிறது. மருத்துவக் கல்வி பெறும் கனவில் மாணவர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகம் 160 இடங்களை இழப்பது என்பது தாங்க முடியாத கொடுமை.

இதையெல்லாம், பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக் கேடானது. ஆகவே, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்.

உடனடியாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்து, அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் சி.எம்.சி. கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்கவும் வழிவிட்டு, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்றவும், மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x