Published : 16 Sep 2017 05:09 PM
Last Updated : 16 Sep 2017 05:09 PM

பூமிக்கு புவி ஈர்ப்பு; பெண்களுக்கு விழி ஈர்ப்பு; தமிழுக்கு மொழி ஈர்ப்பு: ராஜ்மோகன் பேச்சு

 

பூமிக்கு புவி ஈர்ப்பு விசை உள்ளது போல் பெண்களுக்கு விழி ஈர்ப்பு விசை உள்ளது போல் தமிழுக்கு மொழி ஈர்ப்பு விசை உண்டு என்று ராஜ்மோகன் பேசினார்.

'தி இந்து' தமிழ் நாளிதழ் நடத்தும் 'யாதும் தமிழே' 2-ம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 'கற்றுக்கொண்டார்கள் பற்று கொண்டார்கள்' என்ற தலைப்பில் நடிகர், எழுத்தாளர் ராஜ்மோகன் பேசினார்.

''ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியை வணிக மொழி என்பார்கள், இத்தாலியர்கள் தங்கள் மொழியை இலக்கிய மொழி என்பார்கள், தமிழர்கள் மட்டும்தான் தங்கள் மொழியை தாய்மொழி என்கிறோம். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த மொழியால் தேர்வு செய்யப்பட்ட இசைக் கலைஞன் இளையராஜா, ஆஸ்கர் கண்ட தமிழன் ஏ.ஆர் ரஹ்மான் என்பதில் இருந்து இலங்கை முதல் பர்மா வரை தொழில்செய்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள் நம் தமிழர்கள் என நம்மவர்களின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

பூமிக்கு புவி ஈர்ப்பு விசையோ, பெண்களுக்கு விழி ஈர்ப்பு இசையோ அது போல் தமிழுக்கு மொழி ஈர்ப்பு விசை உண்டு. பெஸ்கி என்னும் இத்தாலிய இளைஞன் உலகம் முழுதும் சுற்றியும் திருப்தி அடையாமல் புதுச்சேரி கடற்கரைக்கு வருகிறான், அவனுக்குத் திருப்தி கிடைக்கிறது. தமிழைத்தேடி அடைகிறான். ஓலைச்சுவடிகளை தேடித் தேடி அலைகிறான். தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்ட அவர் தமிழிலிருந்து லத்தீன் மொழியில் அகராதியை இயற்றியவர்.

எங்கேயோ இத்தாலி தேசத்திலிருந்து தமிழ் தேடி வந்த அவர் செய்த சேவை கூட இங்கு 20 சதவிகிதம் கூட செய்யவில்லையே. அ வுக்கு ஆ நெடிலை கொடுத்தவர் வீரமாமுனிவர். கே, கோ போன்ற நெடில்களுக்கு பல முட்டைகள் போட்டவர் வீரமாமுனிவர்.

பரமார்த்த குரு கதைகளை பிரெஞ்சு மொழியிலிருந்து மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர். கொடுந்தமிழ் நூல் இலக்கண நூல்கள் என 27 நூல்கள் எழுதியுள்ளார். அவரது கல்லறை கேரளாவில் பராமரிப்பின்றி மறைந்தே போனது.

பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற இளைஞர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். சென்னை கலெக்டராக வருகிறார். தமிழ் கற்க தமிழ் மேல் பித்து பிடித்து விடுகிறது. அவர் தமிழை வெறிகொண்டு நேசித்தார். அன்றே நாணயத்தில் திருவள்ளுவர் உருவத்தை பொறித்தவர். அவர் பெயரில் எல்லீஸ் சாலை திருவல்லிக்கேணியில் உள்ளது. இதனால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கடிந்து கொண்டது. அவர் ஆராய்ந்து எழுதிய ஒரு நூலில் அவரது முதல் வார்த்தையே தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்துடன் கலந்ததே இல்லை என்று ஆய்வில் கூறுகிறார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்கிறது வரலாறு.

மூன்றாவது மனிதர் ஜி.யூ.போப் கனடா நாட்டுக்காரர். பல ஊர்களுக்குச் சென்றவர் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தால் தமிழ் கற்கிறார். உதகமண்டலத்தில் ஒரு பாடசாலை தொடங்குகிறார். அது மிகப்பெரிய பாடசாலையாக மாறியது. இறுதியாக அமெரிக்காவில் மறையும் முன்னர் அவர் மூன்று கோரிக்கைகள் வைக்கிறார். என் சவப்பெட்டியில் போப் ஒரு தமிழன் என்றும் தமிழ் மேல் பற்றுகொண்டவன் என்று எழுதி வையுங்கள் என்கிறார், சவப்பெட்டிக்குள் பைபிளோடு சேர்த்து திருக்குறள் நூலை வையுங்கள், என் சமாதியில் வைக்கப்படும் செங்கலில் ஒரு கைப்பிடி மண் தமிழ் கைப்பிடி மண் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் படி செய்யப்பட்டது.

இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் வழிகாட்டக்கூடிய தலைவர்கள் ரிசார்ட்டுக்கும் கோட்டைக்கும் அலைய நம்பிக்கை மிக்க இளைஞர்கள் கூடியுள்ளீர்கள்.

அடுத்த மனிதர் கால்டுவெல் ஊர் ஊராக அலைகிறார். நடராஜன் சன்னிதிக்கு செல்கிறார். திருநெல்வேலியில் உள்ள இளையான்குடிக்கு வந்து சேர்கிறார். அங்கு பாடசாலையை உருவாக்கி அங்குள்ள மக்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கிறார். அவர் ஆராய்ச்சி செய்கிறார், அதன் விளைவாக தமிழ் மொழி தோற்றம் குறித்த பல கண்டுபிடிப்புகளை கூறுகிறார். திராவிட மொழி பேசிய மக்கள் மெசபடோமியா வரை சென்றதைக் கண்டுபிடித்தவர் அவர். திராவிட இயக்கம் குறித்த ஆய்வு நூலை எழுதுகிறார். அதை படித்த அனைவரும் இன்று ஒப்புக்கொள்கிறார்கள் தமிழ் சமஸ்கிருதத்தில் வந்ததல்ல என்பதை. மொழியைத் தாண்டி மொழி பேசும் மக்களின் பூர்வீகத்தைப் பற்றி ஆராய்கிறார். திருநெல்வேலி வட்டார நூலை முதன் முதலில் எழுதுகிறார். கால்டுவெல் இறந்து பல ஆண்டுகள் கழித்து இன்னமும் அவருடன் முரண்படுகிற அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேவநேயப் பாவணர் போற்றுகிற ஒரே அறிஞர் கால்டுவெல் மட்டுமே.

இப்படி பல அறிஞர்கள் வெளிநாட்டிலிருந்து மொழி தெரியாமல் வந்தவர்கள் இருக்கிறார்கள், அப்படியானால் நாம் என்ன செய்தோம் என்று விசாரித்த போது திருவண்ணாமலையில் திருக்குறள் பேரவையை ஆண்டுக்கணக்கில் நடத்தி வருகிறார். அவர் பெயர் சேட்டு. ஜார்ஜ் எல் ஹார்ட் என்ற தமிழ்ப் பேராசிரியர் பிறப்பில் அமெரிக்கர். தமிழ்ப் பேராசிரியர், சமஸ்கிருத மொழியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 2004-ம் ஆண்டு அவர் வைத்த ஒரு ஆய்வுக்கட்டுரையில் ஒரு மொழியை அது தரும் தோற்றத்தில் அது அது முதன்மை பெற வேண்டும் என்ற கருத்தை வைக்கிறார். அவர் ஆய்வு மூலம் நமக்குக் கிடைத்தது செம்மொழி அந்தஸ்து.

ஏன் இவர்களுக்கு மட்டுமே இவ்வளவு பற்று. தமிழ் தாய்மொழி இல்லாதவர்கள் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அன்பு. அவர்கள் உலகம் முழுதும் தேடியும் நாம் காட்டிய அன்பு நட்பு பாசத்தின் வாயிலாக அவர்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள். கடவுள், இசை இதையெல்லாம் பார்க்க முடியாது அது உணர்வு. தமிழும் அதுபோன்று உணர்வுதான்.

ஐந்தாண்டு காணுகின்ற இந்து தமிழ் நூறாண்டு தாண்டி ஐந்நூறாண்டு வளர வேண்டும் என் போன்ற தமிழர்களுக்கு மேடை கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை'' என்று ராஜ்மோகன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x