Published : 31 Mar 2023 06:27 AM
Last Updated : 31 Mar 2023 06:27 AM

9 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்க திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

கே.என்.நேரு | கோப்புப்படம்

சென்னை: தாம்பரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரு வெளியிட்ட அறிவிப்பு:

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் என்ற நிலையை அடைய சோதனை முறையில் திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கடலூர், தாம்பரம், ஈரோடு, நாகர்கோவில் ஆகிய 9 மாநகராட்சிகள், காரைக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய 3 நகராட்சிகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான குடிநீர் இணைப்புகள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.420 கோடியில் செயல்படுத்தப்படும்.

திண்டுக்கல், நாகர்கோவில், திருச்சி (ரங்கம் பகுதி) ஆகிய 3 மாநகராட்சிகள், நாகப்பட்டினம், மாங்காடு, வில்லிபுத்தூர், குமாரபாளையம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருவாரூர், உளுந்தூர்பேட்டை, பத்மநாபபுரம் ஆகிய 9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

ரூ.52.50 கோடியில் 25 புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும். மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ.60.90 கோடியில் 100 பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.42 கோடியில் 50 நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். 400 கி.மீ மண் சாலைகள் ரூ.299 கோடியில் தார், கான்கிரீட், இணைப்பு கல் சாலைகளாக மாற்றப்படும். நகராட்சி பகுதிகளில் ரூ.123.80 கோடியில் 28 புதிய வார மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும். பென்னாகரம், காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட 20 பேரூராட்சிகளில் ரூ.345 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். அந்தியூர், ஏமலூர், ஆடுதுறை, சாத்தான்குளம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் ரூ.25 கோடியில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கப்படும் ஊரக, நகர தரைமட்ட தொட்டிகளில் குடிநீர் அளவு மானிகள் பொருத்தி, இணைய வழியில் குடிநீரின் அளவு கண்காணிக்கப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்குதலை உறுதி செய்ய 7 லட்சம் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளின் கட்டிடங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் மீட்டெடுக்கப்பட்டு ரூ.50 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் -திருவல் லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய 7 தொகுதிகளில் தலா ரூ.5 கோடியில் சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும். தொல்காப்பிய பூங்கா ரூ.42.45 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு அப்பால் சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சென்னை குடிநீர் வாரிய குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள் ரூ.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x