Published : 24 Sep 2017 06:54 AM
Last Updated : 24 Sep 2017 06:54 AM

திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும்: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கட்சிக்கு உண்மையிலேயே புதுரத்தம் பாய்ச்சும் வகையில் உறுப்பினர் சேர்ப்பு அமைய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல் ஆகிய இரண்டுமே திமுக சட்டதிட்டப்படி நிறைவேற்றப்பட்டு, அதன்பிறகு கட்சியின் நிர்வாக அமைப்புக்கான தேர்தல் நடத்தப்படும். இந்த நடைமுறை, அண்ணா காலத்தில் இருந்து கருணாநிதி காலம் வரை 68 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கட்சியின் 15-வது தேர்தலை முறைப்படி நடத்த வேண்டியதிருப்பதால் அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 140 வார்டு கழகங்களையும், ஒரு கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட திமுக, தொடக்க காலம் முதல் பாதுகாத்து வரும் ஜனநாயக மரபின் தொடர்ச்சியாக, 15-வது தேர்தலுக்கு தயாராகும் நிலையில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், புதுப்பித்தல் ஆகிய அடிப்படைப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

கட்சி உறுப்பினர் என்ற அடிப்படைத் தகுதியே மற்ற எல்லா பொறுப்புகளையும்விட பெருமிதம் தரக்கூடியது. திமுக உறுப்பினராவது என்பது பெயரளவுக்கு நடக்கும் சடங்கல்ல. இது ஒரு ஜனநாயக முறைப்படியான நிகழ்வாகும். உறுப்பினர் கட்டணம் ரூ.20 செலுத்தி, எந்தக் கிளையில் ஒருவர் உறுப்பினராகிறாரோ அக்கிளையில் அவரது குடியிருப்பு முகவரியுடன், உறுப்பினர் படிவத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிட்டு அதன் நகலையும் இணைக்க வேண்டும் என்பது கட்சி சட்டதிட்டத்தின் திருத்தப்பட்ட விதியாகும். உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு கட்சி அமைப்புகளுக்கான 15-வது தேர்தல் உள்கட்சி ஜனநாயகப்படி நடைபெறும்.

‘திமுகவில் குடும்ப ஆதிக்கம் இருக்கிறது. குடும்பத்தினர்தான் அங்கே பதவிகளைப் பெறுகிறார்கள்’ என்று கூறுகின்றனர். ஆம். இது குடும்பக் கட்சிதான். என் தாத்தாவும் திமுக, என் அப்பாவும் திமுக, நானும் திமுக, என் மகனும் திமுக, நாளை என் பேரனும் திமுகதான். இப்படி குடும்பம் குடும்பமாக இக்கட்சியில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். அந்த வகையில் திமுக குடும்பக் கட்சிதான்.

உறுப்பினர் சேர்க்கையின்போது, பல துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், பொதுநலனில் அக்கறையுள்ளோர் என அனைவரிடமும் கட்சியின் கொள்கைகள், தமிழினத்தின் மேன்மைக்காக ஆற்றியுள்ள செயல்பாடுகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி, அவர்களின் முழு ஒப்புதலுடன் உறுப்பினராக ஆக்குங்கள். நமது உயிருக்கு நிகரானது இந்த இயக்கம். அந்த இயக்கத்தின் உதிரமாக இருப்பவர்கள் உறுப்பினர்கள். எனவே, இந்த இயக்கத்துக்கு புது ரத்தம் பாயும் வகையில் உறுப்பினர் சேர்ப்பு அமைய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x