Published : 29 Mar 2023 06:24 PM
Last Updated : 29 Mar 2023 06:24 PM

2022-23-ல் 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கல்: தமிழக அரசு தகவல்

கோப்புப்படம்

சென்னை: 2022-23 ஆம் ஆண்டில் (பிப்.2023 வரை) 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.02.2023 அன்று வரை மாநிலத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 2.67 கோடி ஆகும் என்று தமிழக அரசின் இயக்கூர்திகள் சட்டங்கள் - நிர்வாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் - நிர்வாகம் பிரிவின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது விருப்பமான இடத்திலிருந்தோ பழகுநர் உரிமம் (LLr) தேர்வினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமலே மேற்கொள்ளலாம். 40 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழைப் பெற்று உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் இல்லாத விண்ணப்பதாரர், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பழகுநர் உரிமம் (LLr) தேர்விற்காக நேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

2022-23ம் ஆண்டில் (பிப்.2023 வரை) 3.49 லட்சம் பழகுநர் உரிமங்கள் தொடர்பு இல்லாத சேவை மூலமாகவும், 6.83 லட்சம் பழகுநர் உரிமங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன.

பழகுநர் உரிமத்தைப் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2022-23 ஆம் ஆண்டில் (பிப்.2023 வரை) 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.02.2023 அன்று வரை மாநிலத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 2.67 கோடி ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x