Published : 29 Mar 2023 12:41 PM
Last Updated : 29 Mar 2023 12:41 PM

சென்னையில் அதிமுக பிரமுகர் கொலை: இபிஎஸ் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பேரவையில் பேசிய முதல்வர்

சென்னை: சென்னையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் வியாசை இளங்கோவன் (48). ரியல்எஸ்டேட் தொழில் செய்துவந்த இவர், அதிமுகவில் வட சென்னை பகுதியின் வடக்கு கிழக்கு மாவட்ட பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செம்பியம் போலீஸார், இளங்கோவன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தலைமறைவான கொலையாளிகளை கைது செய்ய துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து கொலை தொடர்பாக வியாசர்பாடி கக்கன்ஜி அன்பழகன் தெருவைச் சேர்ந்த சஞ்சய் (19), அவரது கூட்டாளிகள் அதே பகுதி நெடுஞ்செழியன் தெரு அருண் (28), அதே பகுதி சர்மா நகர் வெங்கடேசன் (30), கொடுங்கையூர் கணேசன் (23) மற்றும் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர், "அதிமுக பகுதி செயலாளர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். அவர் மனைவி கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது." என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x