Published : 06 Sep 2017 09:38 AM
Last Updated : 06 Sep 2017 09:38 AM

கடந்த ஆண்டைவிட ரூ.165 கோடி கூடுதலாக எல்ஐசி பிரீமியம் வசூல்: மண்டல மேலாளர் தகவல்

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ரூ.165.97 கோடி கூடுதலாக பிரீமியம் வசூல் செய்யப்பட்டுள்ளது என எல்ஐசி மண்டல மேலாளர் தாமோதரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் செப்டம்பர் 1-ம் தேதி தனது 61-வது தொடக்க நாளை முன்னிட்டு ஒருவாரம் ஆயுள் காப்பீட்டு வாரமாக கொண்டாடுகிறது. எல்ஐசி-யின் தென்மண்டலம் 5.89 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்துள்ளதோடு ரூ.1,414.28 கோடி பிரீமியம் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், பாலிசி விற்பனை எண்ணிக்கையில் 23.60 சதவீதத்தையும், பிரீமியம் வருவாயில் 31.01 சதவீதம் என்ற இலக்கினை அடைந்துள்ளது.

சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டில் ரூ.165.97 கோடி பிரீமியம் அதிகமாக ஈட்டியுள்ளது. மேலும், பிரதம மந்திரி வய வந்தனா திட்டத்தில் 9,544 பாலிசிகள் விற்று ரூ.432.70 கோடி பிரீமியம் ஈட்டியுள்ளது.

2016-17-ம் வணிக ஆண்டு இறுதியில் எல்ஐசி தனிநபர் விற்பனைக்கு 23 காப்பீட்டுத் திட்டங்களை தந்துள்ளது. நடப்பு வணிக ஆண்டில் எல்ஐசி நிறுவனம் ஆதார்ஸ்தம்ப், ஆதார் சீலா, ஜீவன் உமங் மற்றும் பிரதம மந்திரி வயவந்தனா யோஜனா ஆகிய 4 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்ஐசி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடி மதிப்பிலான 215 லட்சம் முதிர்வுகளை பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.

எல்ஐசி 98.34 சதவீதம் முதிர்வு உரிமங்களையும், 99.63 சதவீதம் இறப்பு உரிமங்களையும் வழங்கி காப்பீட்டுத் துறையில் மிகச் சிறந்த உரிமம் வழங்கும் அளவுகோலை எட்டி பெருமை சேர்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x