Published : 01 Jul 2014 09:30 AM
Last Updated : 01 Jul 2014 09:30 AM

ஊழல் அதிகாரிகளால்தான் விதிமீறல் கட்டிடங்கள்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் வேதனை

ஊழல் அதிகாரிகள் இருக்கும்வரை விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுக்க முடியாது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் வேதனை தெரிவித்தார்.

சென்னை நகரில் 2 அடுக்கு மாடி அல்லது ஒரு கட்டிடத்தில் 6 குடியிருப்புக்குள் இருக்கும் வகையில் கட்டிடம் கட்டத் திட்டமிட்டால் அதற்கு, சென்னை மாநகராட்சியே திட்ட அனுமதி வழங்கும். அதற்கு மேல் ஒரு கட்டிடத்தின் தளங்களோ, குடியிருப்புகளின் எண்ணிக்கையோ அதிகரிக்கும் பட்சத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) திட்ட அனுமதி பெறவேண்டும். பொதுவாகவே கட்டிடத்துக்கு ஒப்புதல் அளிப்பது, அந்த கட்டிடத்தை கட்டி முடித்ததற்கான சான்றிதழ் வழங்குவது பணம் கொழிக்கும் தொழிலாகவே மாறிவிட்டதாக கட்டுமான நிறுவனத்தினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஓய்வுபெற்ற சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ஒரு கட்டிடத்துக்கான திட்ட அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு நிலையிலும் சில அதிகாரிகளை கவனித்தால்தான் அந்த கோப்பு கையெழுத்துக்கு நகரும். அவ்வாறு பெறப்படும் திட்ட அனுமதியில் அவ்வளவு எளிதாக தவறுகளைக் கண்டுபிடித்துவிட முடியாது. சிறப்புக் கட்டிடங்கள் அல்லது பன்னடுக்குக் கட்டிட அனுமதி விவகாரங்களில்தான் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் வருகின்றன. சதுர அடிக்கு ரூ.30 வரை வசூலிக்கப்படுவதாக கட்டிட நிறுவனத்தினர் புகார் கூறிவருகின்றனர். இதன்படி லட்சக்கணக்கான சதுர அடிக்கு கணக்கிட்டால் தலையை சுற்றுகிறது. இது எந்த ஆட்சி நடந்தாலும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இப்படி கூடுதல் பணத்தைக் கொடுக்கும் கட்டுமான நிறுவனம் கட்டிடத்தின் தரத்தை குறைக்கிறது. இந்த பணத்தை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை வைத்து வசூலிக்கிறார்கள். மாநகராட்சிக் கட்டிட பணிகளிலும் இதேநிலையே நீடிக்கிறது.

சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் வரை இருக்கும். விதி மீறிய பெரிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் நியமனம் செய்த கண்காணிப்புக்குழு உறுப்பினரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தேவசகாயம் கூறியதாவது:

உயர் நீதிமன்றம் நியமித்த அனைத்துத் துறை வல்லுநர்களைக் கொண்ட விதிமீறல் கட்டிடங்கள் கண்காணிப்புக் குழு பெயரளவில்தான் உள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் இருந்தே எங்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை. ஊழல் அதிகாரிகள் இருக்கும்வரை விதிமீறல்களை தடுத்து நிறுத்த முடியாது. பல மாதங்களாக கண்காணிப்புக்குழுவே கூடவில்லை. பணம் கொடுத்து சாதிக்கலாம் என்ற சிந்தனையால்தான் விதிமீறல்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. சிஎம்டிஏ, மாநகராட்சியில் கட்டிடக்கலை வல்லுநர்களை பணிக்கு நியமித்து அவர்களை வைத்து புதிதாகக் கட்டப்படும் கட்டிடத்தின் தன்மையை ஆராய்ந்து தரத்தினைப் பற்றி அவ்வப்போது அறிக்கை தரச் செய்யவேண்டும். அப்படியும் தவறு நிகழும்போது, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு தேவசகாயம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x