Published : 27 Mar 2023 04:35 PM
Last Updated : 27 Mar 2023 04:35 PM

“100 நாள் வேலைத் திட்ட நிதி ஒதுக்கீடு... 2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க இயலாது” - முத்தரசன் குற்றச்சாட்டு

முத்தரசன் | கோப்புப்படம்

சென்னை: "பாஜக ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது. இதில் கடந்த ஆண்டுகளில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதியப் பாக்கிக்காக ரூ.17 ஆயிரம் கோடி வழங்கி விட்டால், மீதியுள்ள ரூபாய் 43 ஆயிரம் கோடியை வைத்து இரு வாரங்களுக்கு கூட வேலை வழங்க இயலாது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது. கடந்த 25.03.2023 ஆம் தேதி வெளியான அரசிதழ் அறிவிப்புப்படி தமிழ்நாட்டில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் 01.04.2023 ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும்.

வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்களும், தொழிற்சங்க அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசின் ஊதிய அறிவிப்பு பெருந்த ஏமாற்றமளிக்கிறது. பாஜக ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கி, அழித்தொழிக்கும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு தலா 100 நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூபாய் 2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து வந்த பாஜக ஒன்றிய அரசு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது.

இதில் கடந்த ஆண்டுகளில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதியப் பாக்கிக்காக ரூ.17 ஆயிரம் கோடி வழங்கி விட்டால், மீதியுள்ள ரூபாய் 43 ஆயிரம் கோடியை வைத்து இரு வாரங்களுக்கு கூட வேலை வழங்க இயலாது என்பதை விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் மதிப்பிட்டு கூறி வருகின்றன.

இந்த நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான அளவில் உயர்த்தாமல், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x