Published : 26 Sep 2017 09:00 AM
Last Updated : 26 Sep 2017 09:00 AM

புதுவையில் வலுக்கும் ஆளுநர் - முதல்வர் மோதல்: கிரண்பேடி மீது வழக்கு தொடர ஆயத்தம் - நாராயணசாமி திடீர் டெல்லி பயணம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் மீண்டும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல்வர் நாராயணசாமி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதே நேரத்தில், ‘அமைச்சர்கள் என்னை சந்திக்கலாம். அவர்களுக்கு நல்லது செய்யவே உள்ளேன்’ என்று வாட்ஸ்அப்பில் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கான சேர்க்கை கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய சிபிஐ, புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இது புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஆளுநர் கிரண்பேடி, ‘அதிகாரிகள் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்க, முறைகேடுகளில் ஈடுபட யார் தூண்டிவிட்டனர் என்பதை தெரிவிக்க வேண்டும். அது ஒன்றே அவர்கள் தப்பிக்க வழி’ என்று கருத்து தெரிவித்தார்.

‘சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பது தவறு. தொடர்ச்சியாக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் ஆளுநர் மீது மான நஷ்ட வழக்கு போடுவேன்’ என்று முதல்வர் நாராயணசாமி எச்சரித்தார்.

சட்ட ஆலோசனை

மேலும் இவ்விஷயத்தில் மேலிட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசிப்பதற்காக நேற்று காலை முதல்வர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது தலைவர்கள் இந்த மாதிரி பேசுவது சட்டத்துக்கு எதிரானது, அதன் மீது எந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என்பது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக புதுச்சேரி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சருக்கு ஆளுநர் பதில்

இந்த பரபரப்பான சூழலில், ‘ஆளுநரின் முட்டுக்கட்டைகளை அகற்றி அரசு செயல்படுகிறது’ என்று அமைச்சர் கமலக்கண்ணன் கருத்து தெரிவித்தார். அதற்கு பதில் கூறும் வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று வாட்ஸ்அப்பில் பதிவிட்ட தகவல்:

புதுவை மாநில வளர்ச்சிக்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதை அகற்ற தயாராக உள்ளேன். என்ன தடைகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு அனுப்பினால் மிகவும் நன்றி உடையவளாக இருப்பேன். இதற்காக யாரையும் எங்கேயும், எப்போதும் சந்திக்கத் தயாராக உள்ளேன்.

ஊழல், முறைகேடுகள் தொடர்பான விசாரணை போன்றவை தான் தடைகள் என்றால் அவை தவறான முடிவாகும். முக்கியமான பணியிடங்களில் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய முயன்று வருகிறேன். ஆளுநர் செயலகத்துக்கு வரும் கோப்புகளை முறையாக பரிசீலித்து துரிதமாக அனுப்புகிறேன்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாநில அமைச்சர்கள் தாங்கள் முக்கியம் என கருதும் எந்த பிரச்சினை குறித்தும் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து ஆலோசிக்கலாம். அவர்களுக்கு நல்லது செய்யவே உள்ளேன். ஊழல், அநீதி, தாமதம் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமே நான் உள்ளேன் என கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x