Last Updated : 26 Mar, 2023 07:36 AM

 

Published : 26 Mar 2023 07:36 AM
Last Updated : 26 Mar 2023 07:36 AM

வீரமாங்குடி அச்சு வெல்லம், பேராவூரணி தேங்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தால் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வீரமாங்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அச்சுவெல்லம். (அடுத்த படம்) பேராவூரணி பகுதியில் விளையும் தேங்காய்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வீரமாங்குடி அச்சு வெல்லத்துக்கும், பேராவூரணி தேங்காய்க்கும் புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முற்சிக்கும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இவற்றுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை சுமார் 40 பொருட்களுக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டு உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லத்துக்கும், பேராவூரணி தேங்காய்க்கும் புவிசார் குறியீடு பெற முயற்சி எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் கொப்பரை மூலம் பாகு காய்ச்சி, அதனை மர அச்சில் ஊற்றி அச்சு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் திருவையாறு முதல் கும்பகோணம் வரை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு இடைப்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் பலர் தங்களது வீடு, தோட்டத்திலேயே கொப்பரை மூலம் அச்சுவெல்லத்தை காய்ச்சி வருகின்றனர். இதில் வீரமாங்குடி பகுதியில் அதிகமாக அச்சுவெல்லம் காய்ச்சப்படுவதால், வீரமாங்குடி அச்சு வெல்லம் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு அச்சு வெல்லம் தயாரிக்கப்பட்டாலும், வீரமாங்குடி பகுதியில் கொப்பரை மூலம் காய்ச்சி பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் அச்சு வெல்லத்துக்கு தனி சுவை இருப்பதால், இதனை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

இதுகுறித்து அச்சு வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயி சீனிவாசன் கூறும்போது, வீரமாங்குடி அச்சு வெல்லத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், உலகளவில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய தொழில் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், இந்த அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்து, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அரசின் எண்ணமும், கொள்கையும் நிறைவேறும் என்றார்.

வண்டல் மண், உப்புக் காற்று: தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடையாக உள்ள பேராவூரணி பகுதியில் தேங்காய் அதிகளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வண்டல் மண்ணும், வங்கக் கடலின் உப்புக் காற்றும், தேங்காயின் சுவை, திடத்துக்கு அதிகளவு பலம் சேர்க்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் தேங்காய் அனுப்பப்படுகிறது. மேலும், இங்கிருந்து தற்போது அரபு நாடுகளுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள தேங்காய்க்கு புவிசார் குறியீடு பெற்றால் உலகம் முழுவதும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புனல்வாசல் விவசாயி வின்சென்ட் அருள்ராஜ் கூறும்போது, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு தேங்காயை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உதவி செய்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.

தமிழக அரசின் புவிசார் குறியீடுக்கான பதிவு பெற்ற பொருட்களின் ஒருங்கிணைப்பு அலுவலரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி கூறியது: வீரமாங்குடி அச்சுவெல்லம், பேராவூரணி தேங்காய் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x