

‘சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவில் 4.90 கோடி வழக்குகள் நிலுவை: கிரண் ரிஜிஜு: ‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்ட அமைச்சர் "தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நீதித் துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது” என்றார்.
கச்சத்தீவு குறித்து மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்: இலங்கை கடற்படையால் கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள பூச்சியூர் என்ற பகுதிக்கு சனிக்கிழமை காலை 30 வயது உள்ள ஆண் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. இந்த யானை மீது சிமெண்ட் மின் கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் வனத் துறையினர், யானைக்கு உடலில் அரிப்பு ஏற்பட்ட காரணத்தால், மின் கம்பத்தில் சொறியச் சென்றபோது மின் கம்பம் விழுந்து, மின்சாரம் தாக்கி யானை மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
“தொடர்ந்து ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்” - ராகுல் காந்தி: எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி டெல்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் ஏற்கெனவே பலமுறை கூறி இருக்கிறேன். இதற்கான உதாரணங்களை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அதன்பிறகு நான் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியை நான் கோருவதாக என் மீது சில அமைச்சர்களே குற்றம் சாட்டினார்கள். உண்மையில் அதுபோன்ற எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்குமாறு மக்களவை சபாநாயகருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகள் என்னை தடுத்து நிறுத்தாது. கேள்வி கேட்பதை நான் நிறுத்தமாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். நாட்டின் ஜனநாயகத்திற்கான எனது போராட்டமும் தொடரும்" என்றார்.
ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்: பாஜக: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, “தகுதி நீக்க நடவடிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த ராகுல் காந்தி முயல்கிறார். தன்னை ஒரு தியாகியாக சித்தரித்துக் கொள்கிறார். விரைவில் நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்திய ராகுலின் செயலை பாஜக, மக்கள் முன் எடுத்துவைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவர் எவ்வாறு வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக முன்னெடுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பதவி இழப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஒரேநாளில் 1,590 பேருக்கு கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது . 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆப்கன் அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்தது. அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.
‘100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்’: நூறு ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினிடம் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ரஷ்ய அதிபர் மாளிகை வாயிலில் நின்று கொண்டிருக்கும் ஜி ஜின்பிங், புதினின் கைகளைப் பிடித்து , “100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும். இந்த மாற்றத்தை நாம் இணைந்து செய்ய இருக்கிறோம்” என்று கூறுகிறார். அதற்கு புதின் “நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன். உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கட்டும்” என்று பதிலளிக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாட்கள் பயணமாக இந்த வாரம் ரஷ்யா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.