

மாஸ்கோ: 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் புதினிடம் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாட்கள் பயணமாக இந்த வாரம் ரஷ்யா வந்திருந்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இரு நாட்டு வணிக உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் சந்திப்பு குறித்து புதின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று பேசினார்.
இந்த நிலையில் ரஷ்ய பயணத்தின் முடிவில் சீன திபர் ஜி ஜின்பிங், புதினுடன் கூறிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் அதிபர் மாளிகை வாயிலில் நின்று கொண்டிருக்கும் ஜி ஜின்பிங் புதினின் கைகளைப் பிடித்து , “ 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும். இந்த மாற்றத்தை நாம் இணைந்து செய்ய இருக்கிறோம்” என்று கூறுகிறார்.
அதற்கு புதின் “ நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன். உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கட்டும்” என்று பதிலளிக்கிறார்.
இதற்கிடையே ஜி ஜின்பிங் இதன் மூலம் அமெரிக்காவுக்கும், பிற உலக நாடுகளுக்ம்கு மறைமுகமான செய்தியை வழங்கி இருக்கிறார் என்று பல அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.