Published : 18 Sep 2017 04:28 PM
Last Updated : 18 Sep 2017 04:28 PM

ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதி: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் இறுதி கெடு

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் தேதியை டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் எந்த காரணத்தையும் காட்டி தேர்தலை தள்ளிப்போடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல்12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் பணம் பட்டுவாடா குற்றச்சாட்டு காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் இது நாள் வரை இந்த தொகுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை.

மேலும் தேர்தலை நடத்தக் கோரி கடந்த ஜூலை 3-ம் தேதி மனு அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், பணப்பட்டுவாடா விவகாரத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கெனவே ரத்தானது. அது தொடர்பாக சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜூன் 4-ம் தேதியுடன் தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கடந்த 3 மாதமாக இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது ? என கேள்வி எழுப்பினர்.

மேலும், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், எந்தவொரு சூழலையும் காரணம் காட்டி இதற்குமேல் இடைத்தேர்தல் நடத்துவதை காலம் தாழ்த்தக்கூடாது எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து ரமேஷ் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x