Published : 24 Mar 2023 07:08 PM
Last Updated : 24 Mar 2023 07:08 PM

ராகுல் காந்தி தகுதி நீக்கம் | மக்களாட்சி கோட்பாட்டுக்கு எதிரான பெரும் தீங்கு: சீமான் கண்டனம்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வலுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன்.

இத்தோடு, அவரது மக்களவை உறுப்பினர் பதவியும் முழுமையாகப் பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும், வெளிப்படையாக நிகழ்ந்தேறும் கொடும் அநீதியாகும். நாட்டையாளும் பாஜக அரசு தனது அதிகாரப்பலத்தைக் கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலைத் தொடர்ச்சியாக அரங்கேற்றுவது ஏற்கவே முடியாத பெரும் கொடுங்கோன்மையாகும். மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரான பாஜக அரசின் இப்படுபாதகச் செயல்கள் நாட்டுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் தீங்காகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இதுபோன்ற வலுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும். இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் சனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் என்றால் மிகையாகாது.

அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x