Published : 08 Sep 2017 08:19 AM
Last Updated : 08 Sep 2017 08:19 AM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது: சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 50,000 பேர் கைது

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ செப்டம்பர் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது.

கருத்து வேறுபாடு

தமிழக அரசுடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஈரோட்டில் முதல்வர் கே.பழனிசாமியை புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவானது. பெரும்பாலான அமைப்பினர் முதல்வரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தனர். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கை குறித்து முதல்வர் உறுதிமொழி அளிக்காததால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி, ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போராட்டமும், சாலை மறியலும் நடைபெற்றன.

உறுதிமொழி...?

சென்னையில் சேப்பாக்கம் எழிலக கட்டிட வளாகத்தில் காலை 10.30 மணிக்கு வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளர்களான மாயவன், எம்.சுப்பிரமணியன், தலைமைச் செயலக சங்க செயலாளர் கு.வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாவட்ட தலைவர் டேனியல் ஆகியோர் தலைமையில் எழிலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மாயவன் நிருபர்களிடம் கூறும்போது, “புதிய ஊதிய விகிதம், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது, காலமுறை ஊதியம் தொடர்பாக முதல்வர் எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து எழிலக வளாகத்தில் பேரணி நடத்தப்பட்டது. அதன்பின்னர் மதியம் 12.45 மணியளவில் அனைவரும் மெரினா கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒருசிலர் சாலையில் உட்கார்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அந்த வழியாக வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அரசுப் பேருந்துகளில் கொண்டுசென்றனர்.

பணி புறக்கணிப்பு

சாலை மறியலில் ஈடுபட்டதாக சென்னை மாவட்டத்தில் 188 பெண்கள் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,850 பேரும், திருவள்ளூரில் 1,100 பேரும், வேலூரில் 3,000 பேரும், திருவண்ணாமலையில் 2,500 பேரும், விழுப்புரத்தில் 1,215 பேரும், கடலூரில் 3,000 பேரும் கைதானார்கள்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 3 மாவட்டங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்ட 8,111 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சேலத்தில் 1,149 பேரும், நாமக்கலில் 1,092 பேரும், தர்மபுரியில் 1,380 பேரும், கிருஷ்ணகிரியில் 1,944 பேரும், திருச்சி, கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் 11,545 பேரும், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 9,640 பேரும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 2,449 பேர் என தமிழகம் முழுவதும் 50,575 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப் பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x