Published : 23 Mar 2023 05:08 PM
Last Updated : 23 Mar 2023 05:08 PM

கல்விச் சுற்றுலா, பிற நிகழ்வுகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் அவசியம்: சென்னை ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், திம்மசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் NSS சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மாணவர் மதனகோபால், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கல்வி நிறுவனம், மாநில அரசு, மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தால் இறந்த மதனகோபாலின் மரணத்துக்கு, ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தாய் சர்மிளா மற்றும் சகோதரி திவ்யபாரதி ஆகியோர் 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், "இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கல்லூரி தரப்பில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தகவல் கொடுத்திருந்தால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது தனியார் கல்லூரி தரப்பில், "கடலில் யாரும் இறங்கக் கூடாது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 54 மாணவ - மாணவியருக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். அதை மீறி, மதனகோபாலும், மற்றொரு மாணவரும் கடலில் குதித்தனர். அலையில் சிக்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தபோது, மதனகோபால் உயிரிழந்து விட்டார். எனவே, இந்த நிகழ்வுக்கு கல்லூரியை பொறுப்பாக்க முடியாது" என வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ச்சி குறித்து தெரிவித்து ஒப்புதல் பெற்றிருந்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். 21 வயது மாணவர் உயிரிழந்திருக்கமாட்டார். எனவே, மாணவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x