Published : 09 Sep 2017 09:03 AM
Last Updated : 09 Sep 2017 09:03 AM

சென்னையில் கோலாகல விழா ஏற்பாடு: பழம்பெருமை வாய்ந்த தமிழுக்கு புது வடிவம் - ‘யாதும் தமிழே’ இலச்சினை உருவான கதை!

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் சர்.முத்தா கான்செர்ட் ஹாலில் வரும் வாரத்தில் நடக்கவிருக்கிறது ‘தி இந்து’-வின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவான ‘யாதும் தமிழே’. இந்த விழாவின் ‘யாதும் தமிழே’ இலச்சினை இன்று பலரையும் ஈர்த்திருக்கிறது எனில், அதற்கு காரணம் அதன் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா. ‘ஆரண்ய காண்டம்’, ‘கத்தி’, ‘ராஜா ராணி’, ‘காற்று வெளியிடை’, ‘விக்ரம் வேதா’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட 25 படங்களின் பெயர்களுக்கு இலச்சினை வடிவமைத்தவர் இவர். அவருடனான சந்திப்பிலிருந்து...

“எனது குடும்பம் ஐந்து தலைமுறைகளாக சிற்பம், ஓவியம் என்று கலைப் பின்னணி கொண்டது. அதுவே என்னையும் கணினி வழியே இங்கே அழைத்து வந்துள்ளது. வெப்சைட் டெவலப்பராக எனது பயணத்தை தொடங்கினேன். வடிவமைப்பு சார்ந்த விஷயங்களைத் திரைப்படத்திலும் செய்யலாமே என்கிற யோசனை வந்தபோது, நண்பன் தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு வேலை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அங்கிருந்து தொடங்கியதுதான் எனது திரைத்துறைப் பயணம்.

சினிமாவில் ஒரு எடிட்டரின் பங்களிப்பு அந்தப் படம் அவரது மேஜைக்கு வந்த பிறகு தொடங்கும். ஒரு நடன இயக்குநர் பாடல் படப்பிடிப்பு இருக்கும்போது, வந்து வேலையை முடித்துக்கொடுத்துவிட்டு செல்வார். இப்படி சினிமாவில் இன்னும் பல பிரிவுகள் உள்ளன. ஆனால், டிசைனர் ஒரு கதை முடிவானதும், அது தயாரிப்பாளர் பார்வைக்கு போவதற்கு முன் தலைப்பு டிசைனில் தொடங்கி அதே படத்தின் வெற்றி விழா மேடை பின்னணி, அங்கே கொடுக்கப்படும் மொமெண்டோவின் டிசைன் வரைக்கும் வேலை பார்க்க வேண்டும். ஆனால், இந்தத் துறை விருது பட்டியலில் இல்லா தது வருத்தமே.

ஒரு திரைப்படத்தின் பெயரைப் பார்க்கும்போதே திரைக்கதையின் தன்மை பார்ப்பவரின் மனதில் பதிய வேண்டும். ‘காற்று வெளியிடை’ கதை காற்றில் மிதந்துகொண்டிருக்கும் போர் விமானி பற்றிய கதை. அதனால்தான் படத்தின் பெயரையும் காற்றில் பறப்பது போல வடிவமைத்தேன். ‘மெர்சல்’ படத்தின் பெயர் மிரட்டும் காளையை மையமாகக் கொண்டு வடிவமைப்பு பெற்றது.

இதைப்போலத்தான் ‘தி இந்து’-வின் ‘யாதும் தமிழே’ என்றதும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாசகம் தோன்றியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கண்டம் தாண்டி எல்லா திசைகளிலும் பல சாதனைப் பயணங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதை மையமாக வைத்து தான் ‘யாதும் தமிழே’ என்ற இலச்சினையை ‘காம்பஸ்’ முத்திரையில் வடிவமைக்கத் திட்டமிட்டேன்.

பழமையும், தனித்துவமும் வாய்ந்த தமிழுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும்போது புதிதாக இருக்க வேண்டும் என்று வரைந்து, அதன் பின்னணியில் கி.பி.2 முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த தமிழ் மொழியின் பழைய எழுத்துகளை இடம்பெறச் செய்தேன். எதிர்பார்த்ததுபோலவே ‘யாதும் தமிழே’ சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது...” என்கிறார்.

இதுமட்டுமா, விழாவுக்கு நேரில் வாருங்கள்... தமிழோடு இணைந்து கொண்டாட இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!

விவரங்களுக்கு:

www.yaadhumthamizhe.com

பதிவுக்கு: SMS,THYTYour Name

Your AgeEmail id to 80828 07690.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x