Published : 23 Mar 2023 06:08 AM
Last Updated : 23 Mar 2023 06:08 AM

சிறு, குறு, நடைபாதை கடை வியாபாரிகளுக்காக அஞ்சல்துறை மூலம் க்யூஆர் கோடு அட்டைகள் அறிமுகம்

ராமேசுவரம்: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை சார்பாக க்யூஆர் கோடு அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கோவிட் பாதிப்பு காலத்தில் மேலும் அதிகரித்தது. 2022 டிசம்பரில் யுபிஐ மூலம் சாதனை அளவாக 12 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

இன்று பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய அளவிலான கடைகளில் கூட வாடிக் கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக க்யூஆர் கோடு அட் டைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரையிலும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதி யாக 'டாக்பே' என்ற பெயரில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் காக க்யூஆர் கோடுகளை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

அஞ்சல் நிலையத்தில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி அலுவலரை வியாபாரிகள் அணுகி, ஆதார் அட்டை நகல், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் கொடுத்து இருப்புத் தொகை இல்லாத பிரீமியம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கியதும் 'டாக்பே க்யூஆர் கோடு' அட்டை வழங்கப்படும்.

இந்த டாக்பே 'கியூஆர் கோடு' அட்டையின் மூலம் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் தங்கள் போன் மூலம் ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இவ்வாறு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் பணம் வியாபாரிகளின் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேமிப்பு கணக்குக்கு சென்று விடும். அந்த பணத்தை வியாபாரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப தங்களது ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் சிறு, குறு, நடைபாதை கடைகள் என அனைத்து வகையான வியாபாரிகளும் இந்த சேவையை பெற, ராமநாதபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் மார்ச் 31 வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x