Published : 04 Sep 2017 07:38 AM
Last Updated : 04 Sep 2017 07:38 AM

நதிகள், மண்ணை பாதுகாக்க புதிய சட்டம் தேவை: நதிகளை மீட்போம் இயக்க விழாவில் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்

நதிகளையும், மண்ணையும் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டுமென நதிகளை மீட்போம் இயக்க தொடக்க விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் ‘நதிகளை மீட்போம்’ என்ற பெயரில் தேசிய அளவிலான வாகன விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. கோவையில் நடந்த தொடக்க விழாவில், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி.சிங் பட்நோர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசும்போது, ‘நமது நதிகளை மீட்க வேண்டுமென்ற நோக்கத்தில் நாடு முழுவதும் 30 நாட்களுக்கு இந்த பயணத்தை தொடங்குகிறோம். இந்த இயக்கத்துக்கு பல மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்தினால், அடுத்த 15 ஆண்டுகளில் நல்ல முடிவு தெரியும். நாம் இருப்போமா எனத் தெரியாது. ஆனால் நம் சந்ததிகளுக்கு அது பயன்படும். நதிகளை மீட்பது என்பது மக்கள் இயக்கமாக மட்டுமின்றி சட்டமாக இயற்றப்பட வேண்டும். வறட்சியால் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெய்யும் மழையையும் தக்க வைக்க முடியவில்லை. ஓரிடம் வெள்ளப்பெருக்காலும், மற்றோர் இடம் வறட்சியாலும் சிக்கிக் கொள்கிறது. இதேநிலை தொடர்ந்தால் நாட்டின் பெரும்பகுதிகளில் விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவே மண்ணையும், நீரையும் காக்க புதிய சட்டம் தேவை’ என்றார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது, ‘நதிகள், வளமான காடு, சுத்தமான காற்று போன்றவற்றையும், அவற்றோடு இணைந்த வாழ்வியல் முறையையும் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அதை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதற்காகவே ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் தொடங்கியுள்ளது’ என்றார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் நதிகளை மீட்போம் இயக்கத்தை ஆதரித்துப் பேசினர். நிகழ்ச்சியில் ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x