Published : 22 Mar 2023 07:48 AM
Last Updated : 22 Mar 2023 07:48 AM

ஈரோடு தேர்தல் அதிகாரி வீடு உட்பட முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை: சொத்து ஆவணங்கள், பணம் சிக்கின

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தியின் வீட்டில் சோதனை நடத்திவிட்டு வெளியேறும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் மைதிலி மற்றும் குழுவினர். | படம் : வி.எம்.மணிநாதன் |

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன.

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநராக பணியாற்றுபவர் ஆர்த்தி (40). இவரது கணவர் ஆனந்தமூர்த்தி (46), தருமபுரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரூ.1 கோடிக்கு சொத்துகள் வாங்கிய புகாரின்பேரில் கடந்த ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சொத்து வாங்கிய புகாரில் ஆனந்தமூர்த்தி, அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் தந்தையும், முன்னாள் வங்கி முதுநிலை மேலாளருமான கலைமணி (70) ஆகியோர் மீது தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரூ.5 கோடி மதிப்பு: இந்த நிலையில், தருமபுரியில் உள்ள ஆனந்தமூர்த்தி வீடு, வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்த்தி வசிக்கும் அரசு குடியிருப்பு, திருச்சியில் ஆர்த்தியின் தந்தை கலைமணி வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், வேலூர் ஆர்த்தி வீட்டில் இருந்து, தருமபுரியில் வாங்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 19 ஏக்கர் விவசாய நிலத்தின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் உள்ள கலைமணி வீட்டில் நகைகள், பணம், சொத்து ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் சுமார் 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கிடைத்த தகவல் குறித்தும் விசாரித்தனர். எனினும், சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தருமபுரி அடுத்த நார்த்தம்பட்டியில் உள்ள ஆர்த்தி வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் அதிகாரி: ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் சிவகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றினார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார். அப்போது பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து அவர் நேற்று மாலை ஈரோடு திரும்பினார். அதன்பிறகு, ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். சிவகுமாரிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு 8 மணி வரை நீடித்தது.

நெல்லையில் சோதனை: திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் நிலம் எடுப்பு தாசில்தாராக பணிபுரிபவர் சந்திரன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள அவரது வீடு, தூத்துக்குடி மடத்தூரில் உள்ள சந்திரனின் மகன் இசக்கிமுத்து வீடு, எட்டயபுரம் சாலையில் உள்ள அவரது நிறுவனம்ஆகிய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x