Last Updated : 18 Sep, 2017 01:38 PM

 

Published : 18 Sep 2017 01:38 PM
Last Updated : 18 Sep 2017 01:38 PM

கோவையில் கொட்டித் தீர்க்கிறது கனமழை: பில்லூர் அணை நிறைந்தது, சிறுவாணி அணை நிறைகிறது - பவானி, நொய்யல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் எச்சரிக்கை

கனமழை காரணமாக கோவையின் பில்லூர் அணை நிரம்பியது. விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இடையே சற்று ஓய்ந்திருந்த மழை, நேற்று முன்தினம் முதல் தீவிரமடைந்தது. கோவையில் வால்பாறை முதல் மேட்டுப்பாளையம் வரை பரவலாக மழை பெய்வதால் நொய்யல், பவானி உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. இரவு, பகலாக மழை தொடர்வதால் நீர் வரத்து வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கோவையின் மேட்டுப்பாளையம், நீலகிரி மலைத்தொடர் ஆகிய இடங்களில் ஒரு வாரமாக நல்ல மழைப்பொழிவு நீடிக்கிறது. இதனால் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான 100 அடியில் நேற்று முன் தின நிலவரப்படி 95.6 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முன் தின இரவு பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று காலை அணையின் நீர்மட்டம் 98 அடியாக உயர்ந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியில் இருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அணை வேகமாக நிரம்பியது. உச்சபட்ச கொள்ளளவான 99 அடியை எட்டியதும் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டது.

பில்லூர் அணையின் நான்கு மதகுகள் வழியாக நேற்று காலை நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் வரத்தான 20 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே உபரிநீராக பவானியாற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விபத்துகளைத் தவிர்க்க முன்கூட்டியே அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மேட்டுப்பாளையம் பகுதியில் பவானியாற்றில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நேற்று மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

‘பில்லூர் அணையில் இருந்து உபரிநீரும், மின் உற்பத்திகாக விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க, குளிக்க யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது’ என்றார் வட்டாட்சியர் ரங்கராஜ்.

நொய்யலில் வெள்ளம்

கோவை நொய்யல், சிறுவாணி நீர் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம், வைதேகி நீர்வீழ்ச்சி, முத்தி குளம் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சிறுவாணி அணைக்கும், நொய்யலை சார்ந்துள்ள நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அருவி மூடப்பட்டது.

சாடிவயல் வழியாக வந்த நீர், நேற்று காலை 6 மணியளவில் சித்திரைச் சாவடி அணையைக் கடந்தது. அந்த வெள்ளம், காலை 9 மணியளவில் குனியமுத்தூர் தடுப்பணையை நிறைத்தது. பின்னர் அங்கிருந்து பேரூர் படித்துறை வழியாக தேவி சிறை தடுப்பணையையும், குறிச்சி தடுப்பணையையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. மற்றொருபுறம் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் வழியாக பேரூர் பெரியகுளம், செங்குளம், கங்கநாராயணம் சமுத்திரம், சொட்டியாண்டி குட்டை ஆகிய நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நீர் வரத்து தொடரும்பட்சத்தில் நொய்யல் ஆற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளம் வரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் குறிச்சி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிச்சி, வெள்ளலூர் குளங்களுக்கான நீர்வழிப்பாதைகளை போர்க்கால நடவடிக்கையாக சுத்தப்படுத்தினால் நீர்நிலைகள் எளிதில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தின நிலவரப்படி கோவையில் சராசரியாக 29 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று அதை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

3 மீட்டரில் நிரம்பும்

கோவையில் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை வேகமாக நிரம்புகிறது. வெள்ளிங்கிரி மலைத் தொடர், முத்திகுளம் அருவி, பட்டியாறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து மழை நீடிக்கிறது. நேற்றைய நிலவரப்படி 154 மி.மீட்டர் மழையளவு பதிவானது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகமாகியுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், 41.6 அடிக்கு நீர் நிறைந்துள்ளது. மேலும் 10 அடிகளுக்கு (சுமார் 3 மீட்டர்) உயர்ந்தால் அணை நிறையும். அணையில் இருந்து நீர் எடுக்கும் 3 வால்வுகள் நீரில் மூழ்கி, 4-வது வால்வும் மூழ்கும் நிலை எட்டியுள்ளது. கோவையின் குடிநீர் விநியோகத்துக்காக தினசரி 31 மில்லியன் லிட்டர் தண்ணீர் அணையிலிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல மழை தொடரும் பட்சத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறுவாணி அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இன்றும் தொடரும்

வேளாண் கால நிலை ஆய்வு மைய இயக்குநர் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘நாளையும் (இன்றும்) பருவமழை தொடரும். நாளை மறுநாளும் (செப்.19) மழை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. நீர் சுழற்சி காரணமாக இந்த ஆண்டு சராசரியைவிட அதிக மழை கிடைக்கிறது (250 மி.மீ.). இந்த மாத இறுதி வரை பருவ மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்றார்.

நொய்யல் நீர் வீணாகும் அபாயம்

குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது: கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து உக்கடம் பெரியகுளத்துக்கு வரும் வாய்க்கால் 3.5 கி.மீட்டருக்கு புதர் மண்டி, மதகுகள் பழுதடைந்துள்ளன. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். குறிச்சி அணையிலிருந்து குறிச்சி குளத்துக்கு வரும் வாய்க்காலின் கரைகளை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளனர். நீர் வரத்தை அறிந்து வாய்க்கால் மட்டும் தூர்வாரப்பட்டது.

இப்போதே குறிச்சி குளத்துக்கு நீர் வரத் தொடங்கிவிட்டது. ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றினால் நீர் வரத்து நல்ல நிலையில் தொடரும். ஆத்துப்பாலத்தில் இருந்து நொய்யல் நீரை வெள்ளலூர் குளத்துக்கு கொண்டு செல்லும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு இடர்பாடுகளையும் உடனே சரிசெய்ய வேண்டும். இம்மூன்று தடைகளையும் உடனே சரிசெய்யாவிட்டால், நொய்யல் நீர் கோவை குளங்களை அடையாமல் வீணாகச் சென்றுவிடும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x