Published : 20 Mar 2023 04:49 PM
Last Updated : 20 Mar 2023 04:49 PM

தமிழ்நாடு பட்ஜெட் 2023: போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ஒதுக்கீடு; 1000 புதிய பேருந்துகள் கொள்முதல்

சென்னை: மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது போக்குவரத்து துறை தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்: நகரங்களில் தற்போதுள்ள பேருந்து பணிமனைகள் முக்கிய இடங்களில் அமைந்திருந்தாலும், அவற்றின் முழுப் பயன்பாடு வெளிக்கொணரப்படவில்லை. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், பேருந்து பணிமனைகளை உயர்தர போக்குவரத்து மையங்களாக தரம் உயர்த்தவும் அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

>முதற்கட்டமாக, 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக, தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டையில் உள்ள 3 பணிமனைகள் 1,347 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்படும்.

> தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

> இம்மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் இரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையைச் சரிசெய்ய, இந்திய இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் புதிய இரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (TIDCO) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும்.

> இம்மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x