Published : 09 Sep 2017 11:22 AM
Last Updated : 09 Sep 2017 11:22 AM

நீட் சட்டநகல் எரிப்புப் போராட்டத்துக்கு மாறாக உண்ணாநிலை போராட்டம்: திருமாவளவன்

 

'நீட்' சட்டநகல் எரிப்புப் போராட்டத்துக்கு மாறாக செப்-16-ல் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை (09-09-2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்" மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுகிறது.

'நீட்' தேர்வு தொடர்பாக நடந்த பொதுநல வழக்கொன்றில், உச்சநீதிமன்றம் இன்று (8-9-2017) தமிழக அரசுக்கு அளித்துள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அதனையும் மீறி ஏற்கனவே அறிவித்தபடி, நமது மாணவர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். வழக்கு, கைது, சிறை என அவர்கள் சில நெருக்கடிகளைச் சந்திக்கும் சூழல் உருவாகலாம். எனவே, தற்போதைக்கு அப்போராட்டத்தைத் தவிர்ப்பதென முடிவு செய்யப்படுகிறது.

அதேவேளையில், அதற்கு மாறாக வரும் 16-09-2017 சனிக்கிழமையன்று அனைத்து மாவட்டங்களிலும் " உண்ணாநிலை அறப்போராட்டம் " நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முற்போக்கு மாணவர் கழகத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களும் மாணவர்களும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை வெற்றிகரமாக ஒருங்கிணத்திட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x