Published : 14 Mar 2023 10:38 AM
Last Updated : 14 Mar 2023 10:38 AM

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்குக: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனே அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு 2015ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு இன்று வரை வழங்கப்பட வில்லை. இதில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஓய்வூதியர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகள் செயல்படுத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டிருக்கிறது.

ஆனால், அந்த ஆணையை செயல்படுத்தாத தமிழக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. அதன் மூலம் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு மேலும் காலநீட்டம் ஆகும் நிலை உருவாகியுள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், நெருக்கடிகளும் காலவரையின்றி தொடர்வதை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டு 88 மாதங்கள், அதாவது 7 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. இந்த 88 மாதங்களில் அவர்களின் வாழ்வாதாரச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அகவிலைப்படியை உயர்த்தாமல் ஓய்வூதியர்களால் கூடுதல் செலவை எவ்வாறு சமாளிக்க முடியும்? அவர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல. அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு மறுக்கக் கூடாது.

தமிழக அரசு நினைத்தால், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த முடியும். எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி , நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும். இது குறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x