Published : 14 Mar 2023 06:54 AM
Last Updated : 14 Mar 2023 06:54 AM

கொல்லிமலை நீர்மின் திட்டப் பணிகளை 2024 அக்டோபருக்குள் முடிக்க திட்டம்: ஆண்டுக்கு 712 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும்

திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நீர் மின்உற்பத்தி நிலையம்.

திருச்சி: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.338.79 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 20 மெகாவாட் நீர் மின் திட்டப் பணிகளை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும் ஆண்டுக்கு 712 லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் பல்வேறு இடங்களிலிருந்து வரும்நீரூற்று அய்யாறாக ஒன்றிணைந்து திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் மலையடிவாரத்தில் அருவியாக விழுகிறது.

இந்த நீரைக் கொண்டு நீர் மின் திட்டத்தை அமைக்க முடிவுசெய்யப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்உரிய கள ஆய்வுகளை மேற்கொண்டு, ரூ.338.79 கோடி மதிப்பில் செயல்படுத்தத் திட்டமிட்டது. இத்திட்டத்துக்கு 21.12.2018-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்துக்கான நீரை சேகரிக்க கொல்லிமலையில் உள்ள அசக்காடுபட்டி, காடம்பள்ளம், தெளியங்காடு, கோவிலூர், இருங்குளிப்பட்டி ஆகிய இடங்களில் நீரை சேகரிக்க சிறு கலிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் குறித்து மின் வாரிய நீர்மின் திட்டப் பொறியாளர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கொல்லிமலையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கலிங்குகளிலிருந்து சேகரிக்கப்படும் நீர் சுரங்கம் மூலமாக செல்லிப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நீர் மின் திட்டத்துக்கென கொல்லிமலையிலிருந்து புளியஞ்சோலைக்கு நீரை கொண்டு வர அமைக்கப்படும் குழாய்.

அங்கிருந்து கீழ்நோக்கி ஏறத்தாழ 2 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் குழாயில் விநாடிக்கு 3,600 லிட்டர் நீரை வேகமாக கொல்லிமலையின் தெற்கு பகுதியான புளியஞ்சோலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையத்துக்கு அனுப்பி, அங்குள்ள டர்பனை சுற்ற வைத்து, அதிலிருந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும்.

இத்திட்டத்தில் மிகக்குறைந்த நீரைக் கொண்டு, 20 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த மின் நிலையத்திலிருந்து ஆண்டுக்கு ஏறத்தாழ 6 முதல்8 மாதங்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சாரம் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் மின்பற்றாக்குறையைப் போக்க பயன்படுத்தப்படும்.

டர்பனில் சுற்றி கீழே விழும் நீர் அய்யாற்றிலேயே விடப்படும். இந்த நீர் மின் திட்டம் மூலம் ஆண்டுக்கு ஏறத்தாழ 712 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இத்திட்டத்தை 2021-ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆயினும் மலை சரிவில் பணிகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டப் பணிகள் தற்போது ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துள்ளன. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2024-ம்ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x